சுருட்ட முடி, தோளில் சோல்னா பை, கையில் இசைக்கருவி அல்லது காபி' - என்று 'ஆதி சே' வை முகநூல் பக்கத்தில் அடிக்கடி பார்க்கமுடியும். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ஆதி அறம் சார்ந்த ஓவியர். கதை சொல்லல், பயணப்படுதல், பறவைகள் காணுதல் என தனக்கு பிடித்ததை செய்து வருகிறார்.



மதுரையில் இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் ஆதியை அவ்வப்போது காண முடியும். இந்நிலையில் ஆதியின் திருமண புகைப்படம் வைரலாக பரப்பப்படுகிறது. காரணம் அவருக்கு நடந்த முற்போக்கான திருமணம்தான். விவாகரத்து பெற்ற பேராசிரியர் சுபாஷினி, ஆதியை மறுமணம் செய்துகொள்ளும்போது, அவரது ஒன்பது வயது மகன் தர்ஷன் தாலி எடுத்துக் கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதனால் பலரும் இத்திருமணத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



இது குறித்து நம்மிடம் ஆதி பேசுகையில், “சுபாஷினி ஒரு ஆங்கில பேராசிரியர். அவரை ஃபேஸ்புக் மூலம்தான் எனக்கு தெரியும். என்னுடை ஓவியம் அவருக்கு பிடித்து போக நல்ல நண்பர்களானோம். ஒரு கட்டத்தில் இருவருக்கு புரிதல் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு முன் தர்ஷனிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டேன். அவனுக்கும் இதில் முழு விரும்பம், அதனால் அவன் கையால் தாலி எடுத்துக்கொடுத்தான். இது ஒரு எதார்த்தமான நிகழ்வுதான், இதற்கு பெரிய திட்டமிடல் இல்லை. ஆனால் இது பலரிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களுக்கு தொடர்ந்து வாழ்த்துகள் குவிகின்றன. வீட்டாரின் விருப்பத்திற்காக பெருமாள் கோவிலில் தாலி கட்டிக்கொண்டோம். அதே போல் எங்களின் விருப்பத்திற்காக பெரியார் சிலை முன் மாலை மாற்றிக் கொண்டோம். இந்த நிகழ்வு என்னை இன்னும் மகிழ்ச்சியடைய செய்தது” என்றார்.



மேலும் இது குறித்து யூ ட்யூபர் புஹாரி கூறுகையில், “ஆதி என்னுடைய நண்பர் அவரின் திருமணத்திற்க அன்பு அழைப்பால் திருமங்கலம் சென்றேன். அவரின் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  தற்போது சினிமாத்துறையில் கால்பதிக்க போராடிக் கொண்டிருக்கிறார். அவரின் திருமணம் மிகவும் வித்தியாசமாக நடைபெற்றது. பெண்ணின் தரப்பில் இருந்து அவருக்கு மாலை அணிவித்தேன். அப்போது என் கண்கள் கலங்கும் அளவிற்கு நெகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. அதேபோல் குட்டிப்பையன் தர்ஷன் அம்மாவின் திருமணத்திற்கு  தாலி எடுத்துக் கொடுத்த நிகழ்வு முற்போக்கானது. பல்வேறு முற்போக்குவாதிகளும் ஆதி - சுபாஷினி தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தால் இன்னும் கவனம்பெற்று, இது போன்ற திருமணங்கள் ஊக்குவிக்கப்படும்” என்றார்.