அரசு ஊழியர்களுக்கும், காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பை கொடுக்க முடியும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு அபாயகரமான நிலையை தி்முக அரசு உருவாக்கியுள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை, விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை, ஒவ்வொரு நாளும் இந்த அரசினுடைய நிர்வாக திறமையற்ற நிலையின் காரணமாக, எல்லாரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அரசினுடைய நிர்வாகக் குளறுபடிகளால், அரசினுடைய நிர்வாக திறமையற்ற காரணத்தால், அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையாக இருக்கிறது.
ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம் ஆனால் அரசு ஊழியர்கள் என்பவர்கள் ஒரு அரசின் நிரந்தர தூண்கள், அரசு ஊழியர்கள் ஓய்வு வயது வரை சேவை செய்யக்கூடிய வாய்ப்பை பெற்றவர்கள். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையை செய்பவர்கள். ஆனால் திராவிட மாடல் அரசிலே இன்றைக்கு அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை தலைப்பு செய்தியாக வந்து கொண்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மக்கள் பிரதிநிதிகளான ஒரு அமைச்சர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மோதலில் போது சமரசம் செய்து வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் கீழே தள்ளப்பட்டு உள்ளார். இது தான் இன்றைய அரசினுடைய அவல நிலை எடுத்துக்காட்டாக உள்ளது. இது மட்டுமல்லாது தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு கிராமத்திலே கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததற்காக அவரை அலுவலகத்திலேயே சாரமாரியாக மணல் மாபியா கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்.
சேலம் மாவட்டத்திலே மனாத்தாள் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரி வினோத் குமார் மணல் கொள்ளை தடுப்பதற்காக சென்றபோது, அவரை வழிமறித்து நடுரோட்டில் துரத்தி படுகொலை செய்ய முயற்சித்தனர். இதைவிட பெரிய கொடுமை என்னவென்று சொன்னால் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில் இன்றைக்கு ஒரு பரிதாபமான சூழ்நிலை உள்ளது. 1.2..2023 அன்று பேராசியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்ற கூட்டத்திலே பாதுகாப்புக்காக சென்ற 22 வயதான பெண் காவலர் மீது திமுகவைச் சேர்ந்த குண்டர்கள் பாலியல் தொந்தரவு செய்கிறார்கள் என்கிற ஒரு நிலை பார்க்கின்ற பொழுது கவலையின் உச்சமாக இன்றைக்கு தமிழ்நாடு மூழ்கி இருப்பதை யாரும் மறக்க முடியாது. திருச்சியில் அமைச்சர் நேருவுக்கும், சிவா எம்பியின் கோஷ்டி மோதலில் காவல் நிலையத்திற்கு உள்ளே நுழைந்தவர்களை தடுத்த பெண் காவலரை தாக்கினர். அதில் பெண் காவலர் கை முறிந்து. அதேபோல் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சோதனை சென்ற வருமானவரிதுறை அதிகாரி மீது திமுகவினர் தாக்குதல் செய்ததில் கைமுறிவு ஏற்பட்டது. காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை, வருவாய்த்துறை அதிகாரிக்கு பாதுகாப்பு இல்லை, உள்ளாட்சித் துறை அதிகாரிக்கு பாதுகாப்பு இல்லை, வருமானவரி துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை, இப்படி சென்றால் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பை கொடுக்க முடியும். கடந்த இரண்டாண்டு மட்டும் 1,989 படுகொலை தமிழகத்தில் நடந்துள்ளன. கடந்தாண்டு 2022ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான 3,511 குற்றசம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டையிலே நேர்மையான பணியாற்றியதற்காக எடப்பாடியாரிடம் 2019 ஆம் ஆண்டில் விருது பெற்ற கிராம நிர்வாக அதிகாரி துரை பிரிதிவிராஜ், தற்போது விடியா திமுக ஆட்சியிலே தனது பணியை நேர்மையாக செய்ய முடியவில்லை என்பதற்காக 2.5.2023 அன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை தருவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி உள்ளீர்கள். அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாக்குவதும், அவர்களை ஏனென்று கேட்பதற்கு நாதியில்லாத நிலையில் இருக்கிற போது அவர்கள் எங்கே போய் முறையிட முடியும் இதெல்லாம் இன்றைக்கு இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்கிறதா? இன்றைக்கு தமிழகத்தில் படுகொலை எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது சமூக விரோதிகளுக்கு கூடாரமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது கவலை அளிக்கிறது. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் நடைபெற்ற திட்டங்களைத் தான் முதலமைச்சர் திறந்து வைத்து விழா எடுக்கிறார். தமிழகத்தில் விழா நடக்காத நாளே இல்லை என்பது போல், தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்பதை போல் உருவாகி உள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவர்கள் பத்திரமாக திரும்பி வருவார்களா என்பது தெரியவில்லை, பள்ளிக்கூட வாசலிலே போதை மருந்து விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஆபரேஷன் 2.0 என்பதை அறிவித்து வருகின்றனர். அறிவிப்பு நிலையில் உள்ளது நடைமுறை இல்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் திமுக மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்