5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது நாளாக இன்று மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சேலம், திருப்பூர், கோவை, திருச்சி. மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


அதன்படி, முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடிவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிலையில், மதுரையில் இன்று ஆய்வு மேற்கொள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். அதன்பிறகு தனது சகோதரர் மு.க.அழகிரியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர்கள் குடும்பத்தை சேர்ந்த சிலர், அழகிரி வீட்டிற்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலின் குறித்து முன்பு விமர்சனங்களை வைத்த அழகிரி, அவர் வெற்றி பெற்ற பின்பாக, அவரை புகழ்ந்து வாழ்த்தியிருந்தார். பதவியேற்பு விழாவில் அழகிரியின் மகன் மற்றும் மகள் பங்கேற்றனர். இந்நிலையில் தான், மதுரை சத்யசாய் நகரில் உள்ள மு.க.அழகிரி வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வுப்பணிகளுக்கு இடையே வந்து சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த சுற்றுப்பயணம் முழுக்க அரசு அலுவல் சார்ந்த பயணம் என்பதால் திமுகவினர் தம்மை சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள வரும் தமக்கு வரவேற்பு அளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க,ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், கொடிகள் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் கூறினார்.




மேலும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலை தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிற்து. இந்நிலையில், கொரோனா தொற்றை பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


நாளை காலை 10 மணிக்கு  முதலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் எனத் தெரிகிறது.


தமிழ்நாட்டில் சில தினங்களுக்கு முன்பு தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தொற்று பாதிப்பு அதிகமிருந்த டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் முழு ஊரடங்கு தொடர்வதால்,பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டிலும் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று  சிலர் கூறி வருகின்றனர். மருத்துவ நிபுணர் குழுவும் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றே முதல்வரிடம் பரிந்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முழு ஊரடங்கு நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.