கருப்பு பூஞ்சை நோய்க்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். வடமாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கருப்பு பூஞ்சை நோய் தற்போது தமிழ்நாட்டிலும் தாக்க தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவர் தனது கண்களை திறக்க இயலாமல் அவதிப்பட்டதை அறிந்து சி.டி ஸ்கேன் எடுத்து பார்த்ததில், கண்களில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 57.
ஆனால், அவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? அல்லது கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்தாரா? என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்தவொரு தகவலும் உறுதியாக தெரிவிக்கவில்லை. ஆனால் அவரின் கண்களில் ஏற்பட்ட பாதிப்பு தான், அறிகுறியாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி பார்வை குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. அந்த நோய் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிகுறியில் பார்வை குறைபாடு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்த நோயால் தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் மராட்டியம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. மராட்டியத்தில் மட்டும் இந்த நோய்க்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், பீகார், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் தாக்க தொடங்கியுள்ளது.
மேலும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சர்க்கரை நோயாளிகள் ஆவர். அதீத சர்க்கரை நோய், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்கும். மேலும், இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது ஆகும்.
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
மியூ கோமைகோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சை மிகவும் அபாயகரமான மற்றும் அரியவகை பூஞ்சை ஆகும். இது தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்த பூஞ்சை பெரும்பாலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தாக்கியுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்படுகிறது. மேலும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நோய் மியூகோர்மைசீட்ஸ் எனப்படும் நுண்ணுயிரிகளின் தொகுப்பால் ஏற்படுகிறது. அவை இயற்கையில் உள்ளன. பெரும்பாலும் மண்ணிலும், இலைகள், உரம் மற்றும் குவியல்கள் போன்ற அழுகும் கரிமப் பொருட்களிலும் காணப்படுகின்றன.
முன்னதாக, கடந்த 17ஆம் தேதி உத்தரகண்டில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பால் முதல்முறையாக ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்துள்ளதாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை கூறியது.
இதுதொடர்பாக எய்ம்ஸ் டாக்டர் ஹரிஷ் தப்லியால் கூறுகையில், “உத்தரகண்ட் மாநிலத்தில் 15 கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.
உத்தரகண்டில் கொரோனா தொற்றுடன், கருப்பு பூஞ்சை ஆபத்தும் அதிகரித்து வருகிறது. மேலும், கருப்பு பூஞ்சை காரணமாக முதல் மரணம் எய்ம்ஸ் ரிஷிகேஷில் பதிவாகியுள்ளது. இந்த நோயால் இறந்தவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பல சோதனைகளுக்குப் பிறகு அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது" என்று கூறினார். மேலும், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர் கூறினார்.