ஆக்ஸிஜனுக்காகவும், தடுப்பூசி உற்பத்திக்கும் சில தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டது போல மூடப்பட்ட பி.ஆர்.பி கிரானைட் நிறுவனத்தை பயன்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. .
'கொரோனா' தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். தேர்தல் பரபரப்பை சிறிதும் குறைக்காமல் பன்மடங்கு பரபரப்பை கொரோனா கொடுத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா, மாஸ்க், கிருமி நாசினி, வேக்சின், ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் என்று கொரோனா தொடர்புபடுத்தும் வார்த்தைகளை அதிகம் கேட்க முடிகிறது. அந்தளவிற்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நோயாளிகளின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. சிலர் தெரிவிக்கும் பாசிடிவ் வார்த்தைகளே பலரையும் மனம் மலர செய்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
தற்போதைய இரண்டாவது அலையில், தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதனால் பல்வேறு இடங்கள் கொரோனா கேர் சென்டர்களாக மாறிவருகிறது. இந்நிலையில் மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை சமாளிக்க புதிய படுக்கை வசதிகளுடன் கொண்ட சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான சிகிச்சை மையங்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், பெரிய இடவசதி கொண்ட பகுதியை மாவட்ட நிர்வாகம் தேடி வந்தது. இந்நிலையில் 500 ஏக்கருக்கும் மேல் அதிக பரப்பளவு கொண்ட பிரபல பி.ஆர்.பி.நிறுவனத்தை தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிறுவனத்தின் மீது கிரானைட் மோசடி வழக்கு தொடரப்பட்டு கடந்த 2012-ல் மூடப்பட்டது. நல்ல இடவசதியும், கட்டட வசதியும் கொண்ட பகுதி என்பதால், விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வரலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து வழக்கறிஞர் ப.ஸ்டாலின் நம்மிடம் கூறியபோது, ‛‛திருச்சி மாவட்டத்தில் சுமார் 1963-ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது மிகப்பெரிய அளவில் பொறியியல் சம்பந்தமான வேலைகள் நடைபெற்று வருகிறது. இங்கு 50 ஆயிரம் நபர்கள் வேலை செய்து வருகின்றனர். பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய 3 பிளான்ட் செயல்பட்டு வந்தது. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டது.
ஆனால் 2003 ஆம் ஆண்டு முதல் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு அப்பகுதி செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் பிளான்ட்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தி.மு.க-வினர் பெல் நிறுவன அதிகாரிகளிடம் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான (ஹெச்.எல்.எல்) பயோடெக் நிறுவனம் 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகளை துவக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்படி அந்தந்த தேவைக்கு ஏற்றார் போல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தற்போது தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் மிகக்குறைவாக உள்ளது. இதனால் பல்வேறு கல்வி நிறுவனங்களையும், மண்டபங்களையும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றிவருகின்றனர். இந்நிலையில் மதுரை மேலூர் அருகே உள்ள தெற்குதெரு பி.ஆர்.பி கிரானைட் குவாரியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் முடிவு வரவேற்க கூடியது தான்.
சம்மந்தப்பட்ட தனியார் கிரானைட் நிறுவனம் 500 ஏக்கரும் மேல் அதிக பரப்பளவு கொண்ட நிறுவனம். இதனை தற்போது நீதிமன்றம் உதவியோடு திறந்து கொரோனா சிகிச்சை மையமாக மாற்றலாம். இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான படுக்கைகள் அமைக்கலாம். அதிகளவு டெண்ட் அமைக்கவும் முடியும். விசாலமாக இருக்கும் இந்த இடத்தை மருத்துவமனைபோல மாற்றலாம். நான்கு வழிச்சாலையில் அமைந்திருப்பதால் ஆம்புலன்ஸ்களும் எளிமையாக சென்றுவரமுடியும். நோயாளிகளின் உறவினர்களும் சமூக இடைவெளியுடன் காத்திருக்க முடியும். தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி, இடவசதி என அனைத்திற்கும் சரியான இடம். இதனால் ஒரே இடத்தில் பல்வேறு துறைகளும் எளிமையாக வேலை செய்யமுடியும். எனவே கிரானைட் நிறுவனத்தை பெருந் தொற்றுக் காலத்தின் தேவைக்காக மட்டும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தேவையான முயற்சியை மேற்கொள்ளலாம்" என்றார்.
நீதிமன்ற உத்தரவை பெற்று கிரானைட் குவாரியை கொரோனா மையமாக மாவட்ட நிர்வாகம் மாற்றப்போகிறதா, அல்லது சிறப்பு ஏற்பாட்டில் உடனடியாக அங்கு மையம் அமையப்போகிறதா, இல்லை மாற்றும் இடம் தேர்வு செய்யப்படப்போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.