தமிழக கேரள எல்லையை இணைக்கும் தேனி மாவட்டம் எல்லைப்பகுதியான கம்பம்மெட்டு, குமுளி வழி என்ற இரண்டு மலை வழி பாதையும் கேரளாவிற்கு சென்றடையும் . தமிழகத்திலிருந்து ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் கேரளாவிற்கு தோட்ட வேலைக்காக சென்று திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்ட நிலையில் இரு மாநில எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த இந்நிலையில், கேரளாவிற்குள் செல்பவர்கள் இ பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார் என்று கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கேரள போலீசாரும், சுகாதாரத்துறையினரும் விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இதனால் தோட்ட தொழிலாளர்கள் கேரளாவிற்கு தோட்ட வேலைகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். தற்போது கம்பத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் கம்பம்மெட்டு சாலை வழியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமார் 63 தோட்டத் தொழிலாளர்கள் கேரளாவிற்குள் செல்ல கம்பம் மெட்டு சோதனைச் சாவடியை சென்றடைந்தபோது, அவர்கள் போலீசார் சோதனையிட்டனர் அப்போது அவர்களிடம் கேரள போலீசார் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளதா என்று கேட்டபோது இல்லை என கூறியதால் கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு சென்ற 63 கூலி தொழிலாளர்களை போலீசார் கேரளாவிற்குள் நுழைய விடாமல் தமிழத்துக்குள் திருப்பி அனுப்பினார்.
தங்களது சொந்த ஊரான மேற்கு வங்கத்திலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தமிழக எல்லையை ஒட்டி சாலையோரத்தில் நின்றிருந்தவர்களின் நிலையை அறிந்த தமிழக போலீசார் தோட்டத் தொழிலாளர்களை கம்பத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவுகளும் வழங்கினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது கேரளாவில் உள்ள ஒருவர் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பவரால் தாங்கள் வந்ததாகவும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் அவர்களை சொந்த ஊருக்கு திரும்பி செல்ல அறிவுறுத்தினர். இதனடிப்படையில் பிழைப்புக்காக வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் கண்ணீருடன் சொந்த ஊருக்கே திரும்பி சென்றனர். பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் கை குழந்தைகளுடன் வந்தவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கண்ணீருடன் திரும்பி சென்றது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.