தற்போது தமிழகத்தில் நாளை முதல் 28-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் மூன்று பிரிவுகளாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது .இதில் திண்டுக்கல் , தேனி இரண்டு மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கானது. 28.6.2021 அன்று காலை 6 மணிவரையில் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை மாவட்டங்களுக்கு தற்போது கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் இரண்டாம் வகையில் 23 மாவட்டங்கள் உள்ள நிலையில் இதில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும் அடங்கும். இந்த இரண்டு மாவட்டங்களும் இரண்டாம் வகையில் உள்ளதால் தற்போது அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் இந்த இரு மாவட்டங்களுக்கும் பொருந்தும். இதில் துணிக்கடைகள், நகைக்கடைகள், திரையரங்குகள் உள்ளிட்ட ஒருசில இடங்களுக்கு மட்டும் தளர்வுகள் கொடுக்கப்படாமல் செயல்பட அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது .
மேலும் காலை 9 மணிமுதல் 5 மணிவரை செயல்பட்டுக் கொண்டிருந்த காய்கறி, பலசரக்கு, மளிகை கடைகள் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் ஆகியவை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது .அரசின் அத்தியாவசியத் துறையில் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்கள் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள தளர்வுகள் அடிப்படையில் காலை 9 மணிமுதல் 5 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சென்ற வாரத்தில் நோய் தொற்றானது தினசரி 100 பேர் முதல் 200 பேர் வரையில் இருந்து வந்தது தற்போது நோய் தொற்றின் பாதிப்பு தேனி மாவட்டத்தில் நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது. அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற வாரம் நோய் தொற்றானது தினசரி 200 பேருக்கும் கீழ் இருந்தது தற்போது 100 பேருக்கும் கீழ் குறைய தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் மிகவும் குறைந்த அளவிலான நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்தவகையில் திண்டுக்கல் மற்றும் பழனி சுகாதாரத்துறை மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 791 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே போல் தேனி மாவட்டத்தில் இது வரையில் மொத்தமாக 1,74,000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்று 97 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து 244 பேர் வீடு திரும்பியுள்ளனர். தேனி மாவட்டத்தில் மட்டும் 1154 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 82 பேர் நோய் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 195 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பொருத்தவரை நோய் தொற்றால் 668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி மாவட்டத்தை விட திண்டுக்கல் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.