மதுரை எய்ம்ஸ்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அன்று, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கட்டுமானம் தொடர்பான எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்த சூழலில் தான், கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டரை மத்திய அரசு கோரியது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்பு இடத்தை சமன் செய்ய முதற்கட்ட வாஸ்து பூஜை தொடங்கியது. தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் வாஸ்து பூஜை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் பேட்டி.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை ரகசிய திட்டத்தைப் போல ஒன்றிய அரசு செய்திருக்கிறது. மதுரைக்கு வந்த மோடி எய்ம்ஸ் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்திருக்கலாம். உண்மை சுடும் என்பதால் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ள தோப்பூர் பக்கமே செல்லவில்லை. அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கிய புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தொடங்கப்பட்டுள்ளது.
கடன் வாங்கி கட்டப்படும் எய்ம்ஸ்
பொறியியல் துறையை கொண்டு ரகசியமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடக்க தேதி மற்றும் வேலை திட்டத்தை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தோம், ஆனால் கடைசி வரைக்கும் எங்களுடைய கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை பொருத்தவரைக்கும் வெளிப்படை தன்மையற்ற பணிகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் கடன் வாங்கி கட்டப்பட உள்ளது.
கண்ணாமூச்சி
கடன் வாங்கி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காரணத்தை ஒன்றிய அரசு கூறவில்லை, ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய ரூ.350 கோடி நிதியை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை முன்னரே தொடங்கி இருக்கலாம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது. பா.ஜ.கவின் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஒரே அமைச்சரவை கூட்டத்தில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு மதுரை தவிர 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டப்பட உள்ள இடத்தில் புல்டேசரை வைத்து குப்பைகளை அகற்றி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுகிறோம் என கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடக்கம் பாஜகவின் தேர்தலுக்கான நாடகம் என்பதை நாடு அறியும்" என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - எப்போது வரும் ...காத்திருந்த மக்கள்; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி துவக்கம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ரயிலில் ரூ180 கோடி போதைப் பொருள் சிக்கிய வழக்கு! பிள்ளமன் பிரகாஷ் மனைவி கைது