மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்பு இடத்தை சமன் செய்ய முதற்கட்ட வாஸ்து பூஜை தொடங்கியது. தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் வாஸ்து பூஜை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


2019-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்


மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அன்று, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கட்டுமானம் தொடர்பான எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க., மற்றும் மாநிலத்தில் ஆளும் தி.மு.க., இடையே கடும் வார்த்தை போர் நடந்து வந்தது. 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாததை தி.மு.க., கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்தது. இது அந்த கட்சிக்கு தேர்தல் முடிவுகளில் நல்ல பலனையும் அளித்தது.


மத்திய அரசுக்கு கடிதம்


எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஒருபுறம் கட்சி ரீதியாக கருத்து மோதலில் ஈடுபட்ட நிலையில், மறுபுறம் தமிழ்நாடு அரசு பல்வேறு முறை கடிதங்களையும் மத்திய அரசுக்கு எழுதியது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை திமுக எம்.பிக்கள் எழுப்பினர். மதுரை எய்ம்ஸ் உடன் அடிக்கல் நாட்டப்பட்ட, அதற்கு பின்பு அடிக்கல் நாட்டப்பட்ட வேறுசில மாநிலங்களில், மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடந்துவிடன. ஆனால்,  தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த சூழலில் தான், கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டரை மத்திய அரசு கோரியது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்பு இடத்தை சமன் செய்ய முதற்கட்ட வாஸ்து பூஜை தொடங்கியது. தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் வாஸ்து பூஜை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


எய்ம்ஸ் வசதிகள்


சுமார் 870 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, 38 படுக்கைகளுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கென வகுப்பறை கட்டிடம். ஆய்வகக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூபாய் 1624 கோடியாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான முழு நிதியும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜெய்கா நிறுவனத்தின் மூலம் பெறப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டிருந்தது. கட்டுமானப் பணிகளுக்கான நிதி தற்போது மத்திய அரசு நிதியுடன் சேர்த்து ரூ.1977.80 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் 21 கோடி மதிப்பீட்டில் ஆறு கிலோ மீட்டருக்கு சாலை பணிகளும் நிறைவடைந்துள்ளது.


சமன் செய்யும் வாஸ்து பூஜை துவங்கியது


எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த தென் மாவட்ட மக்களுக்கு தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளுக்கான தனியார் கட்டுமான எல்&டி நிறுவனம் சார்பில் முதற்கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்யும் வாஸ்து பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஓரிரு வாரங்களில் கட்டுமான பணிக்கான பூஜை தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனை கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.