திண்டுக்கல் பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டி அருகே உள்ளது சுரபி நர்சிங் கல்லூரி. இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அமமுக கட்சியின் அம்மா பேரவை இணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவரது கல்லூரி விடுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு கல்லூரியின் தாளாளர் சுரபி ஜோதிமுருகன் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.



மேலும் நள்ளிரவில் கல்லூரிக்கு வரும் ஜோதிமுருகன் மாணவிகளை தனது காரில் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள அவரின் மற்றொரு கல்லூரிக்கு கூட்டி செல்வாராம். அங்கிருந்து சுமார் ஒரு மணிவரை மாணவிகளை தன்னுடன் இருக்க வைத்துவிட்டு பாலியல் சீண்டல்களை தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா என்ற பெண்ணும் உதவியாக இருந்து வந்துள்ளதாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர். 




இந்நிலையில் இன்று கல்லூரி விடுதியை விட்டு வெளியேறிய மாணவிகள் சுமார் 200 பேர் திண்டுக்கல் பழனி இருப்புப்பாதை அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நிலையில் அங்கிருந்து கலைந்து சென்றவர்கள் திண்டுக்கல் பழநி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதையடுத்து அங்கு விரைந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் ஜோதி முருகனை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என கூறி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போல 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுரபி ஜோதிமுருகன் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு 3 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைக்கு பின் அவர்கள் வீடு திரும்பிய நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி ஜோதி முருகனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் இவ்வழக்கில் இருந்து விடுதலையானார். மேலும் வேட்டைநாய் படத்தில் வில்லனாகவும், கருப்பன், அண்ணாத்த உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண