வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டிருந்ததால் இன்று காலை பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்துள்ளனர். இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கடலில் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.
மேலும், கடந்த சனிக்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீன்பிடி விசைப்படகு ஒன்று நடுக்கடலில் ஏற்பட்ட பலத்த சூறைக்காற்றில் சிக்கி பலத்த சேதமடைந்தது. இதில் படகு நடுக்கடலில் மூழ்கியது. 8 மீனவர்கள் படகில் இருந்த நிலையில், சக மீனவர்களால் மீட்கப்பட்டு கரை வந்து சேர்ந்தனர். நடுக்கடலில் மூழ்கிய படகை மீனவர்கள் மீட்டு இன்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்துக்கு எடுத்து வந்தனர். இங்கு சுமார் 1200க்கும் அதிகமான மீன்பிடி விசைப்படகுகள் உள்ளது.
படகுகளை புயல் காலங்களில் பாதுகாப்பாக நிறுத்த தூண்டில் வளைவுகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என தொடர்ந்து மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ராமேஸ்வரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் சுமார் 50 பழமையானது பல இடங்களில் சேதமடைந்துள்ளதுடன், விசைப்படகில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் படகுகளை நிறுத்துவதற்கு போதுமான இட வசதி இல்லாததால் உடனடியாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை புதுப்பித்து தரவேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கடலில் தத்தளித்த நம்புதாளை மீனவர்கள் 4 பேரை மீட்க கடலோர காவல் படை வராததால் உயிருக்கு போராடிய மீனவர்களை சக மீனவர்களே பத்திரமாக மீட்டுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் 4 பேர் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்தனர். மீனவர்கள் குறித்த தகவலறிந்து சென்ற பொது மக்களும் மீனவர்களும் அவர்களை மீட்டுள்ளனர். திருவாடானையை அடுத்த நம்புதாளை மீனவ கிராமத்திலிருந்து நேற்று மாலை 3 மணி அளவில் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்ததில் நடுக் கடலில் சிக்கி உயிருக்குப் போராடி வந்த நிலையில், நல்வாய்ப்பாக அவர்களிடமிருந்த செல்போன் மூலமாக கரையில் இருந்த மீனவர்களுக்கு தொடர்பு கொண்டு தங்களின் நிலை குறித்து தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து, கடலோர காவல்படையினரின் உதவியை நாடிய மீனவர்கள், மாலை 6 மணிக்கு மேல் தங்களால் பணி செய்ய இயலாது என பொறுப்பற்ற முறையில் கடலோர காவல்படையினர் கூறி அவர்கள் வர மறுத்ததாக மீனவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கரையில் இருந்த படகை எடுத்து சென்ற சக மீனவர்கள், கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிய 4 மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் இது போன்ற ஆபத்து காலங்களில் கடலோர காவல்படையினர் உதவிக்கு வராமல் அலட்சியமாக பேசுவதால் மீனவர்களின் உயிர் துச்சமாக மதிக்கப்படுவதாக நம்புதாளை மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர்.