ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகை விழாவை முன்னிட்டு நிலக்கோட்டையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் சில்லரை மற்றும் மொத்த வியாரிகள் கூடியதால் மல்லிகைப்பூ விலை ரூ.1000 முதல் 1200 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் தமிழகத்தின் இரண்டாவது பூ மார்க்கெட் ஆக விளங்குகிறது. நிலக்கோட்டை பகுதியை சுற்றி பூக்கள் சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் பூக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
தற்போது நாளை தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கணவன் நீடூடி வாழ வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து கொண்டாடும் ஸ்ரீ வரலட்சுமி விரதம். அதேபோல் கேரளாவில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகையை யொட்டி உள்ளூர் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்ய நிலக்கோட்டை பூ சந்தையில் கூடியதால் விலை மேலும் அதிகரித்துள்ளது.
மல்லிகை பூ- 1000 முதல் 1200 ரூபாய், முல்லை பூ-450 முதல் 500 ரூபாய் , ஜாதிப்பூ -300 முதல் 350 ரூபாய், கன்காம்பரம் - 1000 முதல் 1200 ரூபாய், செவ்வந்திப் பூ- 150 முதல் 200 ரூபாய், சம்பங்கி பூ - 450 முதல் 500 ரூபாய், பட்டன் ரோஸ் 250 ரூபாய்,சாதா ரோஸ் - 150 ரூபாய், கிலோ ஒன்றுக்கு விற்பனையாகிறது. வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.