திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரவி.இவர் ஒரு மாற்றுத்திறனாளி சிறுவயதிலே பறவைகள் மீது ஆசை கொண்ட இவர். குடும்ப வறுமை காரணமாக சகோதரி ஏற்பாட்டில் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளையில் தங்கி படித்துள்ளார். அங்கு ஒரு வேலை நல்ல உணவு கிடைப்பதே அரிதாக இருந்துள்ளது.
இதனால் மதுரையில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுள்ளார். ஒரு வேலை உணவு கிடைக்க தான் பட்ட கஷ்டத்தை உணர்ந்த ரவி, அவரது முதல் மாத சம்பளத்தில் பறவைகளுக்கு உணவளிக்க முடிவு செய்து ஒரு ஜோடி ஆப்ரிக்கன் பிஞ்சர்ஸ் பறவையை வாங்கியுள்ளார். அதற்கு உணவு வழங்கி நன்றாக வளர்த்துள்ளார். அந்த ஜோடி பறவை இனப்பெருக்கம் மூலம் பெருகவே அதனை விற்பனை செய்துள்ளார்.அதில் கிடைத்த வருமானத்தில் பறவைகள் கூண்டு வாங்கியுள்ளார். மேலும் அவர் வாழ்வாதாரத்திற்கும் மீதமுள்ள பணம் உதவியுள்ளது.
இதனையடுத்து வியாபார நோக்கத்தில் தன்னம்பிக்கையுடன் பறவைகளை வளர்க்க தொடங்கினார் ரவி, அதில் கிடைக்கும் வருமானத்தில் பெரும் தொகையை பறவைகளுக்கு கூண்டுகள் தயார் செய்தும், உணவு தானியங்கள் வாங்கியும், மேலும் சில பறவைகளும் வாங்கியுள்ளார்.
கடந்த 2004 ஆண்டு சொந்த ஊரான ஆலந்தலை வந்த ரவி தனது வீட்டின் பெரும் பகுதியைப் பறவைகளுக்கு கொடுத்து அவற்றை வளர்த்து வருகிறார். இதில் பல வகையான ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ், கருப்பு வெள்ளை கலர் பிஞ்சர்ஸ் வகைகள் உட்பட சுமார் ஆயிரம் பறவைகளை வளர்த்து வருகிறார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இவரிடமிருந்து பறவைகளை வாங்கி செல்கிறார்கள்..
கடல் அலைகளின் சத்தம் கேட்டு கொண்டிருந்த ஆலந்தலை மீனவ கிராமத்தில் பல்வேறு பறவைகளின் இசையும் கேட்கிறது. மேலும் ரவி வீட்டிற்கு சென்றதும் பறவைகளின் சரணாலயத்தில் இருப்பது போல் இருந்தது. இதுகுறித்து ரவி தெரிவிக்கையில்,’ஒருவேளை உணவிற்கு கஷ்டப்பட்ட நான் பறவைகள் வளர்த்து உணவு வழங்கினேன். இன்று நான் சொந்த வீடு கட்டி, மாற்றுத்திறனாளியான எனது சகோதரர் குடும்பத்திற்கும் உதவி செய்யும் அளவுக்கு இந்த பறவைகள் எனது வாழ்க்கையை உயர்த்தியது. மாற்றுத்திறனாளியாக நான் ஒதுக்கப்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறேன்,கடவுளாக இந்தப் பறவைகளைப் பார்க்கிறேன்’ என்றார் அவர்.