லைகா நிறுவனத்தின் உரிமையாளர் 'சுபாஷ்கரனின்' சொகுசு கேரவன் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில் வாசல் வரை வந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த அவர்களை பா.ம.க., தலைவர் ஜி.கே. மணி வரவேற்று, கோவிலுக்கு அழைத்து வந்தார். மேலும், அவர்களது வாகனங்களை ரத வீதிக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதித்ததும்,  அனைவரும் கோவிலுக்குள் சென்று, தீர்த்தங்களில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து வரும் வரை, இரண்டு மணி நேரம் வரை வாகனங்கள் அங்கேயே நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ராமேஸ்வரம் கோயில் ரத வீதி வரை அனுமதிக்கப்பட்ட லைகா நிறுவன வாகனங்கள்


காசிக்கு அடுத்தபடியாக இந்துக்களின் புனித தலமாக பார்க்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பதால், தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், மத்திய, மாநில  அமைச்சர்கள்  மற்றும் தொழிலதிபர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள்.



லைகா நிறுவன உரிமையாளர்களை அழைத்து செல்லும் ஜி.கே.மணி


இந்தியாவில் உள்ள  12 ஜோதிலிங்கங்களில்  அரிதானவைகளில்  ராமேஸ்வரம் திருக்கோவிலும் ஒன்று என்பதால்   திருக்கோயில் வரை  பக்தர்களின்  வாகனங்கள்  அனுமதிக்கப்படாமல் மேற்கு கோபுரத்தில் தடுத்து நிறுத்தப்படும். மேலும், இந்தக்கோவிலுக்கு  பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால், 2013 முதல் ரத வீதியில் வாகனங்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. மாற்றுத் திறனாளிகள் வாகனங்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் முக்கிய நபர்கள் அல்லது விஐபிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் போது அவர்களது வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு வரக்கூடிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


இந்நிலையில் நேற்று  காலை இலங்கை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த லைகா நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான  சுபாஷ்கரன் அல்லிராஜர் சுவாமி தரிசனம் செய்ய ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வந்திந்தார். திருக்கோவலிலுக்கு வந்த சுபாஸ்கரன் அல்லிராஜா அவருக்கு சொந்தமான  இரண்டு பெரிய சொகுசு கேரவன் வேன்கள் மற்றும் 5 க்கும் அதிகமான சொகுசு கார்கள் அங்கு நிறுத்தப்பட்ட சம்பவம்  அது அங்குள்ள சிவ பக்தர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே சர்ச்சையை கிளப்பிஉள்ளது.



லைகா உரிமையாளர்களின் சொகுசுகார்கள்


திருக்கோவிலுக்கு வரும் வயது முதிர்ந்தோர், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள்,  மாற்றுத்திறனாளிகள் என பலரும் வாகனங்களை மேற்கு வாசல், மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை அருகே நிறுத்திவிட்டு நடந்து வருகின்றனர்.ஆனால்  தொழிலதிபர் என்பதால் அவரது இரு சொகுசு கேரவனில்   நேரடியாக கோயில் நிர்வாகத்தின் வாசல்வரை அனுமதித்தது யார் என்ற கேள்வியை  பக்தர்கள் மற்றும் உள்ளூர்  மக்கள்; எழுப்பியுள்ளனர்.


மேலும், இலங்கை இறுதி கட்ட போரில் இலங்கை வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழர்களை கொன்று குவித்தது ராக்பக்‌ஷ தலைமையிலான  இலங்கை அரசு.  எனவே  இலங்கை நிறுவனத்தை    தமிழகததில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக தலைவர் வை.கோ  விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள்  எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என கூறி வந்தனர்.



சாமி தரிசனம் செய்யும் லைகா உரிமையாளர்கள்


ஆனால்  லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா பாமக மாநிலத் தலைவர், ஜி.கே. மணி அழைத்து வந்து சுவாமி தரிசனம் செய்ய வைத்தார். இதுகுறித்து ஜி.கே. மணியின் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்ட போது  சுபாஸ்கரன் அல்லிராஜா ஜி.கே. மணியின்  மகனுடன் தொழில் ரீதியாக கூட்டு வைத்திருப்பதாகவும், அவருடைய நெருங்கிய நண்பர் என்பதாலும் அவர் அழைத்து வந்து சுவாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தனர்.



சுபாஷ்கரனுடன் ஜி.கே.மணி


ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் இது குறித்து கூறுகையில், மாற்று திறனாளிகள், முதியோர்கள் வரும் வாகனங்களை கூட ரத வீதியில் அனுமதிக்காத போலீசார், வசதி படைத்த அதுவும் சிங்களத்தவரை அனுமதித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள் தடபுடலாக வரவேற்று, அழைத்துச் சென்றது கண்டனத்திற்குரியது.சாதாரண பக்தருக்கு ஒரு சட்டம், வசதி படைத்தவருக்கு ஒரு சட்டம் என செயல்படுவதை கண்டிக்கிறோம். இச்சம்பவத்தில், விதி மீறிய அதிகாரிகள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு இறுதிப் போரின்போது, ஈவு இரக்கமற்ற முறையில் தமிழ் உறவுகளை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு, இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது. தொடர்ந்து இலங்கை அரசுக்கும் இலங்கையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் முதலீடு செய்து தொழில் செய்து வரும் இலங்கை நிறுவனங்களை எதிர்ப்பதாக உதட்டளவில் கூறிக்கொள்ளும் தமிழ் அமைப்புகள் இதுபோன்ற சம்பவங்களை வேடிக்கை பார்ப்பதாகவே உண்மையான தமிழர் பற்றாளர்களால் பேசப்படுகிறது.