பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

 
பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - மதுரை மற்றும் செங்கோட்டை இடையே ஒரு வழி சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் - கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை) ரயில் (06161) சென்னை எழும்பூரில் இருந்து நாளை செப்டம்பர் 30  (செவ்வாய் கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் வழியாக பயணித்து மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரை வந்து சேரும். 
 
சிறப்பு ரயிலின் திட்டம் என்ன?
 
இந்த சிறப்பு ரயிலில் இணைக்கப்படும் 12 ரயில் பெட்டிகள் அகலமான நுழைவு வாயில்கள், வசதியான இருக்கைகள், இருக்கைகள் தவிர்த்த விசாலமான இடவசதி, கழிப்பறை வசதிகள் கொண்டவை. இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல சென்னை தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ஒரு வழி சிறப்பு ரயில் (06013) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 30 அன்று மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக பயணித்து மறுநாள் அதிகாலை 03.00  மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். இந்த ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத  இருக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இரண்டு சரக்குப்பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.