மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் பிரதிவாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிவகங்கை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள                        விழுதுகள் மையத்தில் நடைபெறவுள்ளது -  சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள்
 
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் ஒரே மாதிரி முறையில் நடத்தப்பட வேண்டும் என அரசாணை (அரசாணை எண்: 30 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மா.தி.ந (3.1) நாள்:04.11.2022)  பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் வேறு வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதனை மாற்றி அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள விழுதுகள் (ஆரம்ப நிலை கண்டறிதல்) மையத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
அதன்படி, புதன் கிழமைகளில் கை, கால் இயக்க குறைபாடுடையோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு, குள்ளத்தன்மை, அமில் வீச்சால் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் இரத்த வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கும் வெள்ளிக்கிழமைகளில் அறிவு மற்றும் மனநலக்குறைபாடுகள் மற்றும் நரம்பியல் சார்பு குறைபாடுடையோர்களுக்கும் நடைபெறவேண்டும் என அரசாணையில் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திலும் திங்கட்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்று வந்த அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் இனிவரும் காலங்களில் 08.10.2025 புதன்கிழமை  அன்று முதல் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விழுதுகள் (DEIC) மையத்தில் மேற்சொன்னவாறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுவுள்ளது. 
 
என்ன ஆவணங்கள் கொண்டுவரவேண்டும்
 
இம்முகாமில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை www.swavlambancard.gov.in என்ற இணையதளத்தில்  Apply for UDID  என்ற பக்கத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து அதன் ஒப்புகைச்சீட்டு மற்றும் 3 சமீபத்திய மார்பளவு புகைப்படம், ஆதார் நகல், மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன்  முகாம் நடைபெறும் நாளில் நேரில் சென்று கலந்து கொண்டு பயன்பெறலாம் பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.