ஆர்.பி.உதயகுமார்
தேனி வேட்பாளர் வி.டி. நாராயணசாமியை ஆதரித்து பெருங்காமல்லூர், சின்ன கட்டளை, சேடப்பட்டி, அத்திபட்டி, சாப்டூர், வேப்பம்பட்டி, கிருஷ்ணாபுரம், எம். கல்லுப்பட்டி,சுப்புலாபுரம், மேலதிருமாணிக்கம், உத்தபுரம், ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ”பெருங்காமநல்லூர் பகுதியில் கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த தியாகிகளுக்கு ஒன்றேகால் கோடியில் மணிமண்டபத்தை அமைத்து தந்தது எடப்பாடியார் ஆவார். அது மட்டுமல்ல மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து வழங்கினார். தற்போது எடப்பாடியார் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் 133 வாக்குகளை கொடுத்துள்ளார் அதில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடி உயர்த்துவோம் என்று கூறப்பட்டுள்ளது நிச்சயம் உங்களுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றுவோம். அதேபோல் தாய்மார்களுக்கு 3000 ரூபாய் வழங்குவோம் என்று கூறப்பட்டுள்ளது நிச்சயம் நாங்கள் வழங்குவோம் ஏனென்றால் நாங்கள் சொன்னதை செய்வோம்” என்றார்
டிடிவியை யாரும் நம்பவில்லை..
இன்றைக்கு தேனியில் போட்டியிடும் டிடிவி தினகரன் பற்றி உங்களுக்கு தெரியும் அவர் போகும் இடமெல்லாம் மக்கள் அங்கு இல்லை ஏனென்றால் யாரும் அவரை நம்பவில்லை. நம்பிச்சென்ற தங்கதமிழ் செல்வனுக்கு நன்றாக தெரியும், அவரை நம்பிச்சென்ற 18 எம்.எல்.ஏக்கள் நிலை என்ன என்பது நன்றாக தெரியும். அவரை நம்பி சென்றவர்களை எல்லாம் நட்டாற்றில் விட்டுவிடுவார் ஆனால் எடப்பாடியாரை நம்பியவர்களை கரை சேர்ப்பார். இன்றைக்கு திமுக கூட்டணியில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர் தமிழகத்திற்கு வரவேண்டிய 36,000 கோடியை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து கேட்டு வர முடிந்ததா? இவர்களால் தமிழகத்தில் எந்த நன்மையும் இல்லை. இன்றைக்கு திமுக சாதனை செய்துவிட்டோம் என்று விளம்பரம் கொடுத்து வருகிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் அம்மா ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. தற்போது மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்த வரி உயர்வு, பால் விலை உயர்வு அது மட்டுமல்ல இன்றைக்கு தமிழகத்தில் மூன்றரை லட்சம் கோடி லட்சம் கோடி கடனாக வைத்துள்ளார் ஸ்டாலின். கட்டுமான பொருட்களான சிமெண்ட், ஜல்லி, செங்கல் ஆகிய விலைவாசி எல்லாம் 40 சதவீதம் உயர்ந்து விட்டது.
விலைவாசி உயர்வு
அதேபோல் சமையல் பொருட்களின் விலைவாசி எடுத்துக்கொண்டால் எடப்பாடியார் ஆட்சியில் கிலோ அரிசி 45 ரூபாய் விற்றது தற்போது 60 ரூபாய்க்கு இருக்கிறது. துவரம் பருப்பு ஒரு கிலோ எடப்பாடியார் ஆட்சியில் 120 ரூபாய்,தற்போது திமுக ஆட்சியில் 175 ரூபாய், பாசிப்பருப்பு ஒரு கிலோ 100 ரூபாய் இருந்தது தற்போது 125 ரூபாய், எண்ணை ஒரு கிலோ 250 ரூபாய் இருந்தது தற்போது 350 ரூபாய், உளுந்து ஒரு கிலோ 100 ரூபாய் இருந்தது தற்போது 150 ரூபாய், கொண்டக்கடலை ஒரு கிலோ 120 இருந்தது தற்போது 160 ரூபாய் இருக்கிறது.
1000ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு கொடுத்துவிட்டு தற்போது பத்தாயிரம் ரூபாய் அளவில் கூடுதலாக செலவை சுமத்தியுள்ளனர். தமிழகத்தில் போதை நடமாட்டம் அதிகரித்து உள்ளது தற்போது திமுகவை சேர்ந்தவரே போதை பொருள் கடத்தல் தலைவராக உள்ளார். இங்கு போட்டியிடும் நாராயணசாமி மிகவும் எளிமையானவர் உங்கள் வீட்டில் காதுகுத்து போன்ற நிகழ்ச்சி வைத்தால் தேனியில் இருந்து இரண்டு கிடாவுடன்(ஆடு )தாய் வீட்டு சீதனமாக உங்களுக்கு கொண்டுவருவார்.
அதேபோல் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் உடனே வந்து விடுவார். இவர் உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்றைக்கும் இருப்பார். தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை நாராயணசாமி மத்திய அரசு போராடி, வாதாடி, கும்பிட்டு கெஞ்சி கூத்தாடி நிச்சயம் வாங்கித்தருவார்” என பேசினார்.