கொடைக்கானல் 100 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியான கொடைக்கானல் சுற்றுலா தலமாக விளங்கும் மலை பிரதேச பகுதிகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கோடை காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டேதான் இருக்கும்.
கொடைக்கானலுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சுற்றுலா சென்றனர். அப்போது டால்பின் நோஸ் என்று அழைக்கப்படக்கூடிய மலைப்பகுதியில் சென்ற தன்ராஜ் என்ற இளைஞர், 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து, மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் இறங்கினர்.
இளைஞர் மீட்பு:
இதையடுத்து, பள்ளத்தில் விழுந்த தன்ராஜ்ஜை பத்திரமாக மீட்டனர். இது, அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடைக்கானல் மலைப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக இருப்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் , மாநிலங்களில் இருந்தும், ஏன் உலக அளவிலான சுற்றுலா பயணிகள் கூட வருவது வழக்கம். கொடைக்கானல் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய பகுதி மட்டுமன்றி ஆபத்து நிறைந்த பகுதியுமாகவும் பார்க்கப்படுகிறது. அழகும் ஆபத்தும் உள்ளதை, சிலர் அறியாது ஆபத்தான பகுதிகளில் இளைஞர் சிலர் செல்வதை சாகசமாக எண்ணுகின்றனர். வனத்துறை சார்பாக ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட போதிலும், சிலர், எச்சரிக்கையையும் மீறி செல்வதால் சில நேரங்களில் ஆபத்து ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது.
மீண்டும் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ்:
அனைத்து இடங்களிலும், வனத்துறை மற்றும் காவல்துறை பாதுகாப்புக்காக இருக்க முடியுமா என்பது சாத்தியமாகாத செயல். எனவே, பொதுமக்கள் இதை உணர்ந்து, எச்சரிக்கையுடன் சுற்றுலா சென்று வந்தால் விபத்துகளை தவிர்க்கலாம். இதுகுறித்து, சமீபத்து மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற மலையாள திரைப்படம் ஒன்று வெளியானது. அதில் குணா குகை பள்ளத்தாக்கில் விழுந்த நபரை மீட்பது போன்ற கதைகளம் திரைப்படமாக்கப்பட்டது.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படமாக்கப்பட்டதால், மிகவும் பிரபலமானது. இதையடுத்து, கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்கு, பயணிகள் மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று விடுமுறை தினத்தையொட்டி, சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருகை தந்த நிலையில், இளைஞர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து காப்பாற்றப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read: GT vs SRH LIVE Score: முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய குஜராத்; ரன்கள் சேர்க்க தடுமாறும் ஹைதராபாத்!