சிவகங்கை மானாமதுரை அருகே பட்டியல் வகுப்பு கல்லூரி மாணவர் ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம்: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கல்லூரி மாணவரிடம்  தேசிய SC/ST ஆணையத்தின் இயக்குநர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
 
3 இளைஞர்கள் ஆயுதங்களால் தாக்கி கைகளில் வெட்டிய விவகாரம்
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் அய்யாசாமி (19) என்ற கல்லூரி மாணவனை அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் ஆயுதங்களால் தாக்கி கைகளில் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் அய்யாசாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
தேசிய  ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் பரிந்துரை செய்துள்ளார்.
 
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய SC/ ST ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் மேலபிடாவூர் கிராமத்தில் சம்பவம் நடைப்பெற்ற பகுதிகளை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் மற்றும் பல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவரின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் தீர்வு உதவித் தொகையாக 62ஆயிரத்தி 500 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் மேலபிடாவூர் கிராமத்தை சுற்றியுள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கும் அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கவும், பாதுகாப்பு வழங்கவும்  தேசிய  ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் பரிந்துரை செய்துள்ளார்.
 
மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை
 
இதனைத் தொடர்ந்து மதுரை‌ அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவர் அய்யாசாமியை மருத்துவக்குழுவினர் உதவியோடு தனி  அறைக்கு அழைத்துச் சென்று கல்லூரி மாணவர் தாக்குதலுக்குள்ளானது குறித்தும், ஏற்கனவே இது போன்று சாதிய ரீதியான கொடுமைகள் அரங்கேறியதா? என்பது குறித்தும்  விசாரணை நடத்தினர். பின்னர் மாணவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கல்லூரி மாணவரை தாக்கியதாக கூறப்படும் மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேசிய SC/ST ஆணையம் கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.