சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் புகழ் பெற்ற காளி கோவில் உள்ளது. துடியான காவல் தெய்வமாக பார்க்கப்படும் கோவில்களில் முக்கியமான கோவிலாகவும் விளங்குகிறது. தங்களது எதிரிகளை பழிவாங்க சில்லரைக் காசு வெட்டிப் போடும் பழக்கம் முக்கியமானது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். ஆடி வெள்ளி போன்ற விசேஷ நாட்களில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இக்கோவிலில் பிரம்மாண்டமான குதிரை சிலையின் கீழ் மடப்புரம் காளி ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். இந்த சிலையின் முகத்தில் இருந்த 2 கல் பதிக்கப்பட்ட 42 கிராம் தங்க மூக்குத்திகள் இரவு நேரத்தில் திருட்டு போயுள்ளன.
கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இரவு நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர் சீனிவாசன் தலைமையில் இரண்டு இரவு நேர காவலர்களும் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே கோயில் சுவர் ஏறி குதித்து மர்ம நபர்கள் வைர மூக்குத்திகளை திருடி சென்றுள்ளனர். இந்த கோவிலைச் சுற்றி 21 கண்காணிப்பு கேமரா இருந்த நிலையில் அதில் உள்ள ரகசிய கேமரா காட்சி அடிப்படையில் உள்ளே வரும் இளைஞர், காளி அம்மனிடம் மூக்குத்தியை திருடிவிட்டு மீண்டும் அரிவாள் எடுத்து வந்து உண்டியலை சுற்றி வந்து மீண்டு வந்த வழியாக கொள்ளையில் ஈடுபட்டு சென்று உள்ளான்.
காலை பூஜையின் போது கண்டறியப்பட்டு திருப்புவனம் காவல்துறையினர் செயல் அலுவலர் புகார் கொடுத்துள்ளார். அதில் திருடு போன கல் பதிக்கபட்ட 42 கிராம் மூக்குத்திகளின் மதிப்பு குறிப்பிடப்படவில்லை. கல் வைக்கபட்ட தங்க மூக்குத்திகள் என்பதால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு வாய்ந்தவை என கருதப்படுகிறது. அம்மனின் மூக்கில் எதுவும் இன்றி சேதமடைந்த நிலையிலேயே பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருட்டுச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். புகழ்பெற்ற மடப்புரம் காளி அம்மனிடம் இருந்து தங்க மூக்குத்திய திருடி சென்றது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்