சிவகங்கை மாவட்டம், ராஜா துரைசிங்கம் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக  வாழ்வாதார இயக்கம் சார்பில் படித்து, வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பதற்கான  இளைஞர் திறன் திருவிழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காலை 10 மணிக்கு துவக்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்காக படித்த இளைஞர்கள் விழா அரங்குக்குள் விரைவாகவே அழைத்து வந்து அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.






 

இதனை தொடர்ந்து அங்குள்ள செய்தியாளர்கள் மூன்று மணி நேரத்துக்கு மேலாக இளைஞர்கள் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டதாக செய்தியினை வெளியிட்டனர். அதன்பின் காலை 11 மணிக்கு மேல் விழா நடைபெறும் கல்லூரிக்கு வருகை தந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அங்கு நின்று கொண்டிருந்த  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை காரில் இருந்து அடிப்பது போல் இறங்கி வந்து மிரட்டியுள்ளார். அதை  வீடியோ எடுப்பது தெரிந்து கொண்டவுடன் சுதாரித்த அமைச்சர் அங்கிருந்து நழுவிச் சென்றார். தற்போது செய்தியாளர்களை மிரட்டும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.



இதுகுறித்து சிவகங்கை செய்தியாளர்கள் சிலர்..,” தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைப்பு தொடர்பாக பயிற்சி அளிப்பதற்கான திறன் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நிரலில் 10 என மணி போடப்பட்டிருந்தது. ஆனால் படித்த இளைஞர்கள் அனைவரும் காலை 8 மணிக்கு அழைத்து வரப்பட்டு அமரவைக்கப்பட்டிருந்தனர். இதனை செய்தி வெளியிட்ட சக செய்தியாளரை மிரட்டி அமைச்சர் அடிக்க முற்பட்டார். மேலும் தவறான வார்த்தையையும் பேசினார். வீடியோ எடுக்கிறோம் என தெரிந்து கொண்ட பின் சுதாரித்துக் கொண்டார். அதனை வீடியோ எடுத்த எங்களை வசைபாடினார். அமைச்சரை சுற்றி அவரின் ஆதரவாளர்கள் இருந்ததால் அவரிடம் விளக்க முடியவில்லை. அமைச்சர் எங்களை மிரட்டியது மன வேதனை அளிக்கிறது என்றனர்.



இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் பேசினோம், “நடைபெற்ற நிகழ்ச்சி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி அல்ல. அமைச்சருக்காக காத்திருக்க வேண்டும் என்ற நிகழ்வு அல்ல. காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெறும் நிகழ்வில் அமைச்சர் இடையே கலந்து கொள்கிறோம் எனக் கூறி கலந்துகொண்டார். ஆனால் மாணவர்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர் என தவறான செய்தி வெளியாகியுள்ளது. வேலை வாய்ப்பு திறன் குறித்த நிகழ்ச்சி என்பதால் சிலர் முன்கூட்டியே வந்திருக்கலாம். அமைச்சர் 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்தார் என்பது தவறான தகவல்” என தெரிவித்தார்.