சிவகங்கைக்கு குழந்தாபுரி, சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்கள் முன்பு இருந்ததாகக் கருதப்படுகிறது.
தனித்துவமான வரலாறு சிவகங்கைக்கு உண்டு
சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் பெரிய நகரமாக மாநகராட்சியாக இருப்பது காரைக்குடிதான். ஆனாலும், அந்த காரைக்குடிக்கும் தலைநகர் சிவகங்கை தான். ஏனெனில் சிவகங்கையை தலைநகராகக் கொண்டு அரசர் காலத்தில் அரசாட்சி செய்ததால் இன்னும் அந்நிலையே தொடர்கிறது. சிவகங்கை என்ற உடனே சிவகங்கை அரண்மனையின் முகப்புத் தோற்றமே அனைவரின் நினைவிலும் வரும். தமிழக வரலாற்றிலேயே ஏன் இந்திய வரலாற்றிலேயே தனித்துவமான வரலாறு சிவகங்கைக்கு உண்டு. விடுதலைக்காக போரிட்ட முதல் பெண்ணரசி வேலுநாச்சியார் ஆண்ட பகுதி, முதல் ஜமீன்தார் நடைமுறை பெற்ற பகுதியும் இதுதான். சிவகங்கை வரலாறு குறித்து சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் கா.காளிராசா நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
சிவகங்கை உருவான வரலாறு
சிவகங்கையைச் சுற்றி சோழபுரம், கோவானூர் முடிகண்டம், நாட்டரசன்கோட்டை, காளையார் கோவில் போன்ற ஊர்கள் இருந்தாலும் சிவகங்கை 1729க்கு பிறகே உருவானது. சாத்தப்ப முனிவரின் அருள் ஆசியின் படி 1730ல் சிவகங்கையின் அரசராக இருந்த சசிவர்ணத் தேவரே இவ்வூரைத் தோற்றுவித்தார், சிவகங்கை என்னும் நீரூற்றை ஏற்படுத்தி தெப்பக்குளத்தையும் பெரிய அரண்மனையும் உருவாக்கி குளத்திற்கும் ஊருக்கும் சிவகங்கை என பெயரிட்டார். 1800-ல் சிவகங்கையின் ஐந்தாவது மன்னர் வேங்கை பெரிய உடையாத் தேவர் கல்வெட்டில் அஷ்ட லக்ஷ்ணம் பொருந்திய சிவகங்கை என குறிப்பிடப்படுகிறது. குளத்தின் தென்மேற்குப் பகுதியில் அரண்மனை மிகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டப்பட்டது. அரண்மனையின் மேல் தளத்தில் உள்ள குறுகிய பாதையில் நின்று கொண்டே ஒருவர் பல எதிரிகளை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் உள்ளே அரச மரபினரின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இவ்வம்மனுக்கு இன்றுவரை பல விழாக்களுடன் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தாமரைத் தாடகமாக விளங்குகிறது
அரண்மனையின் உள்ளே பழமையான நீச்சல் குளம் ஒன்று உள்ளது, இது குளமாகவும் விளையாட்டுத் திடலாகவும் பயன்படுத்தப்படும் வகையில் சிறப்பான கட்டுமானத்தை உடையதாக அமைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 1772ல் காளையார் கோயில் போரில் முத்துவடுகநாதர் இறந்தார், அதன் பிறகு சிவகங்கை ஆற்காட்டு நவாப் ஆட்சியில் இருந்தது, அப்போது சிவகங்கை ஹுசைன் நகர் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இக்காலத்தில்தான் சிவகங்கை வாலாஜா நவாப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டது. இந்நகருக்கு மருது சகோதரர்கள் பொன்னாத்தாள் குளம், உடையார் சேவை ஊரணி ஆகியவற்றை உருவாக்கித் தந்தனர். இன்றும் ஊரின் கிழக்கே பொன்னாத்தாள்குளம் தாமரைத் தாடகமாக விளங்குகிறது, ஊரின் குடிநீர்த் தேவையை கார்த்திகைத் தேவர் ஊரணி நீண்ட காலம் நிறைவு செய்தது.
சிவகங்கை சிவன் கோயில்
சிவகங்கையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில், திருஞான சுப்பிரமணியர் கோயிலாக எழுப்பப்பட்டது. பின்னாளில் இலட்சுமி அம்மாள் என்ற பெண்மணியால் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1883ல் இலட்சுமி அம்மாள் சிவகங்கை சுப்பிரமணியர் கோயிலை முறைப்படி பதிவு செய்யப்பட்ட பத்திரம் மூலமாக கோயிலை பராமரிக்க மன்னரிடம் ஒப்படைத்தார். இக் கோயிலில் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி விழா, கார்த்திகை விழா போன்ற அனைத்து விழாக்களும் முருகனுக்காகவே இன்றும் நடைபெற்று வருகிறது. சிவகங்கை நகரில் அமைந்துள்ள இக்கோவிலும் சசிவர்னேஸ்வரர் கோவிலும் சிவகங்கை தேவஸ்தானக் கோவிலாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சுந்தரராஜப் பெருமாள் கோயில்
இக்கோயில் யானையின் பின்புறம் போல அமைந்த கஜபிரதிஷ்ட கருவறையையும் விமானத்தையும் கொண்டுள்ளது. இங்கும் சசிவர்னேஸ்வரர் கோயிலைப் போன்று 13 ஆம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள் உள்ளன. இதை இந்திய தொல்லியல் துறையும் பதிவு செய்துள்ளது. இவற்றைக் கொண்டு இது பழமையான கோயிலாகக் கருத இடமுண்டு ஆனாலும் இவை முடிகண்டம் போன்ற அழிவுற்ற கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டு கட்டப்பட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இங்கு சிவகங்கை அரண்மனையினரான மகமு சுந்தரபாண்டியனுக்கும் அவரது தாயர் மகமு நாச்சியாருக்கும் கற்சிலைகள் உள்ளன.
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி.
சிவகங்கை ஜமீன்தார் இரண்டாம் போத குரு மகாராசா அவர்களால் அனைவரும் கல்வி கற்கும் வகையில் 168 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டது சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி ஆகும். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி 1947 இல் மன்னர் சண்முகராஜா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.
அனைத்து வழிபாட்டுத்தலங்கள்.
இங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம், ப்ரெட்ட ஸ்டாண்ட் தேவாலயம், மசூதிகள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தனவாக உள்ளன.
சிவகங்கை அரசர்கள் மற்றும் ஜமீன்தார்கள் காலக் கல்வெட்டுகள்
சிவகங்கை நகர்ப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிவகங்கை அரசர்கள் ஜமீன்தார்கள் கால கல்வெட்டுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. சிவகங்கை முந்நூறு ஆண்டுகள் பழமையான நகரமாக இருந்தாலும் இதனைச் சுற்றியுள்ள சிற்றூர்கள் மிகவும் பழமையானதாக உள்ளன. பையூர், அரசனேரி கீழமேடு ஆகிய இடங்களில் பெருங்கற்கால இரும்பு உருக்கு எச்சங்கள் பெருமளவில் கிடைக்கின்றன. சிவகங்கைக்கு குழந்தாபுரி, சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்கள் முன்பு இருந்ததாகக் கருதப்படுகிறது.