வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத அளவிற்கு அதிமுக வெற்றியைப் பெறும் என சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.

 

அ.தி.மு.க., கள ஆய்வுக் கூட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்

 

அ.தி.மு.க.,வின் கிளை, வார்டு, வட்டகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய கள ஆய்வுக் குழு ஒன்றை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  நியமித்தார். இந்தக் குழுவில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாச்சலம், பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து நெல்லை, கும்பகோணம் கள ஆய்வுக் கூட்டம் அதே போல் மதுரை மாநகர், புறநகர் அ.தி.மு.க., கூட்டங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது அ.தி.மு.க.,வினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டதில் ”வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத அளவிற்கு அதிமுக வெற்றியைப் பெறும்” என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம்


சிவகங்கை தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க., சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நத்தம் விஸ்வநாதன், பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.கவிற்கு இறங்கு முகம் தான் என்றும், மக்களிடத்தில் வெறுப்பையும் அருவருப்பையும் தி.மு.க., சம்பாதித்து இருக்கிறது என்றவர், இன்று தேர்தல் நடந்தாலும் அவர்கள் தோல்வியடைந்து வீட்டுக்குப் போவது உறுதி என்றும், இந்த முறை தி.மு.கவை வீழ்த்துவது எளிமையானது என நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக வா, அதிமுக வா


மேலும் இந்த ஆட்சியில் தந்தை மகனை பாராட்டுகிறார். மகன் தந்தையை பாராட்டுகிறார். இதைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டியவர், தொடர் தோல்வியை சந்தித்ததால் அ.தி.மு.க.,வினர் சோர்ந்து போய்விட்டதாக தி.மு.க., பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது.  13 ஆண்டுகள் தோல்வியை சந்தித்த திமுக மீண்டும் ஆட்சியை பிடித்த போது, நாம் பெற்ற தோல்வி சாதாரண தோல்வி எளிதில் ஆட்சியைப் பிடித்து விடலாம்ச்என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாத அளவிற்கு அதிமுக வெற்றியைப் பெறும் என்றார். தொடர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலேயே அதிமுக இல்லாததால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்றவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வா, அதிமுக வா என்று தான் மக்கள் மத்தியில் முன் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


 

கூட்டத்தின் நடுவே மின்சாரம் துண்டிப்பு

 

பின்னர் கூட்டத்தில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்படவேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் இருளில் மூழ்கிய நிலையில் தொண்டர்கள் தங்களது செல்போன் வெளிச்சத்தை காண்பித்த நிலையில், மண்டபத்தில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து மீண்டும் பேச ஆரம்பித்த நத்தம் விஸ்வநாதன் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்படும், இந்த ஆட்சிக்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி என்று கிண்டல் செய்யவே, உடனே கூட்டத்தில் சிரிப்பொலி ஏற்பட்டது. முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நிகழ்ச்சியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.