பனைமரம் ஏறும் போதும்,  இறங்கும் போது கைகால் எல்லாம் நடுங்கும். கப்ப ரெண்டும் வலிக்கும். கரும்பு சிலாம்பு கைய கிழிக்கும், பாம்பு, கதண்ட கண்டா கொலை நடுங்கும்” என்ற கஷ்டத்தை விவரித்தார் மணிகண்டன். ஓட்டு வீட்டில் வாழும் மணிகண்டன் மாற்றுத்திறனாளி, சில வருடங்களுக்கு முன் வரை பனைமரம் ஏறி வைரம் பாஞ்ச ஒடம்பாதான் இருந்தது. போதாத காலம் மரத்தில் இருந்து விழுந்ததால் இடுப்புக்கு கீழ எதுவும் வேலை செய்யல. ஒன்னுக்கு கூட தானாதான் போகும். இதைப் பார்த்த மனைவியும் குழந்தைகளும் கூட விட்டுட்டு போய்டாங்க வயசான அம்மா, அப்பா தான் பார்த்துக்கிறாங்க. இனி என்ன செய்ய போறேனு தெரியல என்ற படி கண்ணீர்பட வெதும்பினார் மணிகண்டன். 


 





சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கொம்புகாரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் மணிகண்டன். அவரது அப்பா மாற்றுத்திறனாளி அம்மா கூலி. இதனால் சிறுவயதில் இருந்தே மணிகண்டனுக்கு பனைமரம் ஏறுவது தான் தொழில். கல்யாணமாகி  ஆண் மற்றும்  பெண் குழந்தைகள், மணிகண்டனுக்கு இருக்கின்றனர். இந்த சூழலில் கடந்த 2 வருடத்திற்கு முன் மணிகண்டன் எப்போதும் போல மரம் ஏறி ஓலை வெட்ட மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மரத்தில் இடிவிழுந்து மணிகண்டன் மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணிகண்டனின் உயிரை மட்டும் காப்பாற்ற முடிந்தது என டாக்டர்கள் கை விரித்துவிட்டனர்.



இதனால் மணிகண்டன் இடுப்புப் பகுதிக்குக் கீழ் எதுவும் வேலை செய்யாமல் போய்விட்டது. இதையடுத்து வீட்டில் வைத்து பராமரித்துக் கொண்டார் மணிகண்டன் மனைவி. சில நாட்களிலேயே வெறுத்துப் போன மனைவி ஒரு கட்டத்திற்கு மேல் ஒப்பாமல், இனி இவரால் ஒன்றும் முடியாது என கணவரை கை கழுவி விட்டு குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் மணிகண்டனின் தாயும்,  மாற்றுத்திறனாளி தந்தையும் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். ஆனால் மருத்துவ உதவி கிடைக்காமல் மணிகண்டன் கண்ணீர் வடித்து வருகிறார். இருக்கும் சில காலம் என்ன செய்ய போகிறேன் என தெரியாது என புலம்பினார்.



 

தொடர்ந்து மணிகண்டன்..., " பனைமரம் ஏறும் தொழில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில் தான். ஆனாலும் வயித்து பொழப்ப காப்பாத்தனும்னு மரம் ஏறி பிழைச்சேன் . போதாத காலம் மரத்தில் இருந்து விழுந்துட்டேன். என்னால் பணம் சம்பாரிக்க முடியாது என்று தெரிந்தவுடன் என் மனைவி என்ன விட்டு போய்டா. எனக்கு ஏற்பட்ட விபத்தவிட என் மனைவி செஞ்சதுதான் தாங்கிக்க முடியல. அந்த நொடியே செத்துருவோம்னு நினைச்சேன். ஆனா எங்க அப்பா, அம்மா நிலைமையை பார்த்து சாகவும் மனசு வரல. போற உசுர் அதுவா போகட்டும்னு தண்ணியும், கஞ்சியும் குடிச்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன். எனக்கு எதாவது அரசு பண உதவி செஞ்சா மருத்துவ செலவுக்கு பயணா இருக்கும்" என்றார் கண்ணீருடன்.