சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தேவகோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்  பி.சி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே காரைக்குடி பகுதியைச் சேர்ந்த  பசுபதி என்ற இளவரசன் (22) மற்றும் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பாலகணேஷ் (19) என்ற மாணவனுடன் நட்பு ரீதியாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பால கணேஷ் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆசைக்கு இணங்காமல் அவரது நட்பை மாணவி தவிர்த்ததாக சொல்லப்படுகிறது.




இந்நிலையில் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துவிட்டேன் எனக் கூறி எலி பேஸ்டை மாணவி அருந்தியுள்ளார். இதையடுத்து மாணவிக்கு விஷம் பாதிப்பை ஏற்படுத்தவும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவியிடம் காவல்துறையினர் மரண வாக்குமூலம்  வாங்கிக் கொண்டுள்ளனர். மேல் சிகிச்சைக்காக மதுரையில்  சிகிச்சை பெற்ற  19 -வயது மாணவி உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் மரண வாக்குமூலம் அடிப்படையில் பாலகணேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




அதே போல்  பசுபதியின் மீது மாணவியின் குடும்பத்தினர் புகார் அளித்ததால் இருவரையும் காரைக்குடி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மாணவி கொடுத்த வாக்கு மூலம், குடும்பத்தினர் கொடுத்த புகார், உடற்கூறு ஆய்வு, மற்றும் விசாரணை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க அடுத்த கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர். மாணவன் பாலகணேஷின் செல்போன் ஆடியோக்களையும் விசாரணைக்கு உட்படுத்தி வருவதகாவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050