ரயில் பாதை சரியாக இருக்கிறதா என கண்காணிக்க கீமேன் (Key Man) பதவியில் உள்ள ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் தினந்தோறும் ரயில் பாதையில் நடந்து சென்று ஆய்வு செய்வார்கள். நடந்து செல்லும் போது ரயில் தண்டவாளத்திற்கும் சிலிப்பர் கட்டைக்கும் இணைப்பாக உள்ள கிளிப்புகளை அடித்து சரி செய்வார்கள்.

 



இதுபோல கீமேனாக பணியாற்றிய சிவகாசி ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் சி. சுபா, கடந்த மாதம் ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை இணைப்பு பற்ற வைப்பு பகுதியில் விரிசல் இருப்பதை கண்டார். உடனடியாக ரயில் பாதை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து ராஜபாளையம், சங்கரன் கோவில் நிலைய மேலாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் ராஜபாளையத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. அதேபோல மணப்பாறை - கொளத்தூர் ரயில் நிலையங்கள் இடையே கீ மேனாக பணியாற்றிய ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் கே. வளர்மதி ரயில் பாதையில் பற்ற வைப்பு பகுதியில் விரிசலை கண்டுபிடித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்தார்.



 

இந்த இரு பெண் ஊழியர்களுக்கும் மதுரையில்  நடைபெற்ற ரயில்வே பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். முது நிலைக் கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முது நிலை கோட்ட பொறியாளர்கள் ஆர். நாராயணன், பிரவீனா, ஹிருதயேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.