பார்வை சவால் கொண்ட பெண்ணிடம் லஞ்சம் ? - பெண் வி.ஏ.ஓ., அதிரடி சஸ்பெண்ட்

மாற்றுத்திறனாளி சரண்யாவிடம் 3000 வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது, வி.ஏ.ஓ.விடம் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது.

Continues below advertisement
பார்வை சவால் கொண்ட மாணவி
 
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யூனியனுக்குட்பட்ட கீழநெட்டூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி ராஜேஸ்வரி தம்பதியின் மகள் சரண்யா வயது 24. இவருக்கு சிறுவயதில் இருந்து கண் பார்வை குறைவாக இருந்துள்ளது. சிறிது நாட்கள் மட்டும் சிறிது பார்வையோடு வாழ்ந்து வந்த சரண்யா, காலப்போக்கில் முழுமையாக கண்பார்வை இழந்துவிட்டார். தந்தை உடல்நல குறைவால் உயிர் இழக்கவே  குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு தனது தாயாருடன், மேலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்துள்ளார். நண்பர்கள், தன்னார்வலர்கள்  மற்றும் ஆசிரியரின் உதவியோடு மதுரையில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் படித்து முடித்துள்ளார்.
 
 
மாற்றுத்திறனாளி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் உதவி
 
இவர் விளையாட்டுப் போட்டியிலும் திறமை வாய்ந்தவராக திகழ்ந்து  மாவட்ட அளவில் மட்டுமில்லாமல், மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்றுள்ளார்.இந்நிலையில் படிப்பு முடிந்து சொந்த ஊரான கீழநெட்டூர் கிராமத்தில் தாயுடன் குடியேறினார். ஆனால் அவர் படித்த சான்றிதழை வைக்க கூட முறையான அறையில்லாமல் சிரமப்பட்டார். இவரது நிலை குறித்து ஊடங்களில் வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் இவரது கோரிக்கையை ஏற்று வீடு கட்டிக் கொடுக்கும் ஆணை வழங்க உத்த்தரவிட்டார். இந்நிலையில் பார்வைச் சவால் கொண்ட சரண்யாவிடம் அப்பகுதி பெண் வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
 
பெண் வி.ஏ.ஓ.மீது தொடரும் புகார்
 
கீழநெட்டூர் கிராமத்தில் வி.ஏ.ஒ.,வாக பணியாற்றி வருபவர் ராக்கு. இவர் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. குறிப்பாக கிராமத்திற்கு சரியாக வருவதில்லை, பட்டா மாறுதலுக்கு பணம் வாங்குவதாகவும் இப்படி பல புகார்கள் வாசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழநெட்டூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரண்யாவிடம் சட்ட விரோதமாக  ரூபாய் 3000 வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வி.ஏ.ஓவை கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் 3000 பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டு உள்ளார். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். 
 
 
Continues below advertisement