சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைவராக லதா அண்ணாத்துரை செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சேர்மனாக பதவி வகிக்கும் லதா அண்ணாதுரை ஊராட்சி மன்றங்களில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர்களிடம்  10% கமிஷன் கேட்பதாகவும், அதனை அமைச்சர், கலெக்டர், பி.டி.ஓ., என எல்லோருக்கும் பங்கிட்டு கொடுக்க வேண்டும் என கேட்கிறார் எனவும்,  இதனை புகாராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சொல்வோம் என இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசிக் கொண்டதாக வெளியான ஆடியோவால் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

இதுகுறித்து ஆடியோ தொடர்பாக கீழ்மேல்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தர்மராமுவிடம் பேசினோம்...," ஊராட்சி மன்றங்களில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு கமிஷன் கேட்கப்படுவது உண்மை தான். அதனால் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த டெண்டர் கூட நின்று விட்டது. பல்வேறு ஊராட்சிகளில் இருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு சேர்மன் 10% கேட்பதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் சொல்கின்றனர். எனது பெயரில் கூட வேறு ஒரு திட்டத்தில் என்னுடைய கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி பணம்பெற்றுள்ளனர்" என குற்றம் சாட்டினார்.

 



மேலும் ஆடியோவில் மற்றொரு பகுதியில் பேசியதாக கூறப்படும் சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணத்திடம் பேசினோம்...," நான் தி.மு.க.வில் மகளிர் அணி பொறுப்பில் இருக்கிறேன். தி.மு.க.,வில்  இருந்து கொண்டு தி.மு.க., சேர்மன் குறித்து எப்படி பேசுவேன். அந்த ஆடியோ கட் செய்து சேர்க்கப்பட்டுள்ளது. முழுமையான ஆடியோ என்னுடையது இல்லை. கட்சி பூசல் காரணமாக இவ்வாறு செய்துள்ளனர். இனி அமைச்சர் முகத்திலும், சேர்மன் முகத்திலும் எப்படி முழிக்க முடியும்" என்று தெரிவித்தார்.



 

மேலும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணாதுரையிடம் பேசினோம்...," அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட உள்ளது. அது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்கள் கேட்டனர். ஆனால் ஆடியோவில் பேசிக் கொள்ளும் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்களும் என்னை அணுகவில்லை. இந்நிலையில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இவ்வாறு தவறாக சொல்கின்றனர். அண்ணா மறுமலர்ச்சி திட்டமே எங்கள் பகுதியில் இன்னும் ஆரம்பிக்கவில்லை ஆனால் கமிஷன் கேட்டதாக பொய் சொல்கின்றனர். அவர்கள் பின்னால் யாரோ செயல்படுகின்றனர்" என தெரிவித்தார்.


 

திட்டங்களில் கமிஷன் கைமாறினால் கண்டிப்பாக எந்த திட்டமும் முழுமையாக நிறைவேறாது. எனவே இது போன்ற விசயங்களில் அரசு முழுமையாக் தலையிட்டு குற்றங்களை குறைக்க வேண்டும் என மானாமதுரை பகுதி சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.



 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண.