திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 58 பேர் காயம். சாலையின் குறுக்கே வந்த பெண்ணின் மீது மோதாமல் இருக்க திருப்பியதால் விபத்து என தகவல்.
பேருந்து விபத்து
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் கும்மங்குடி பாலம் அருகே கோயம்பத்தூர் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்தை நிலக்கோட்டையைச் சேர்ந்த சென்ராயன் என்பவரும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுநர் சுதர்சன் என்பவரும் ஒட்டி வந்தனர். அப்போது சாலையின் குறுக்கே வந்த பெண் மீது மோதாமல் தவிர்க்க திருப்பிய போது, இரு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில். சம்பவ இடத்தில் டிரைவர் உட்பட 8 பேர் பலியான நிலையில், படுகாயம் அடைந்த 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு
இந்த விபத்தில் 9 பெண்களும், ஓட்டுநர் சென்ராயன் உட்பட 2 ஆண்களும் என உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 117 பயணிகளில் 58 பேர் காயமடைந்து திருப்பத்தூர், மதுரை, காரைக்குடி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும், உரிய சிகிச்சை மேற்கொள்ளவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையிலும், எஞ்சியவர்களின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டன. விபத்து குறித்து அறிந்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்த சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து நாச்சியாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சமும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.