சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து: 11 பேர் பலி. அவசர தகவல் எண் அறிவிப்பு, சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
சிவகங்கையில் கொடூரமான விபத்து
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இன்று மாலை நடைபெற்ற கொடூர சாலை விபத்தில், இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 35 பேர் காயமடைந்துள்ளனர், இப்படியாக துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்ததாக, ஆரம்ப கட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிகிச்சை பெறும் போது, மேலும் ஏழு பேர் உயிரிழந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 11 பேரில் நான்கு பெண்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், மேலும் நான்கு பேரின் சடலங்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும், மூன்று பேரின் சடலங்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளானவர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்
விபத்தில் பலத்த காயமடைந்த ஐந்து பேர் தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து பல மணி நேரம் நடைபெற்றது. 108 அவசர சேவை ஆம்புலன்ஸ்கள் 10-க்கும் மேற்பட்டவை பயன்படுத்தப்பட்டு, காயமடைந்தவர்கள் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரில் சென்று காயமடைந்தவர்களை பார்க்கவும், அவர்களிடம் ஆறுதல் கூறவும், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து தகவல் பெற்றும் மீட்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆய்வு
சம்பவ இடத்திலும், மருத்துவமனைகளிலும் மாவட்ட நிர்வாகத்துடன் காவல்துறையும் இணைந்து தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விபத்து நடந்த இடத்துக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியும் சம்பவ இடம் மற்றும் மருத்துவமனைகளில் நேரில் பங்கேற்று நிலைமையை ஆராய்ந்தார். இதற்கிடையில், விபத்துக்கள் தொடர்பாக அவசர தகவல் பெறுவதற்காக 04575 246233 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்
விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் மற்றும் படு காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.