மதுரை பழங்காநத்தம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 23 ஆவது மாநில மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான இடதுசாரி இயக்க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஹிட்லருக்கு ஏற்பட்ட கதி தெரியுமா?
இந்த மாநாட்டில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மத்திய பாஜக அரசு மனுதர்ம ஆட்சியை கையில் எடுத்துள்ளது சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது. மொழி கல்வி, சட்டங்கள் என வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொள்கை ரீதியாக இணைந்து வெற்றி கண்டது போல கொள்கை ரீதியாக பாஜகவிற்கு எதிரான அனைவரையும் இந்தியா முழுவதும் இணைந்திருந்தால் பாஜக வென்றிருக்க முடியாது. தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டுகொள்ளாமல் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் விலையை உயர்த்துவார்கள். மக்களின் துன்பத்தை பற்றி துளியும் கவலை இல்லாத சர்வாதிகார பாசிச அரசாக மோடி அரசு செயல்படுகிறது. அதனை எதிர்த்து போராடுகிறோம். இதனை கண்டு யாரும் அஞ்சவில்லை, பாசிச கொள்கையை மேற்கொண்ட ஹிட்லருக்கு ஏற்பட்ட கதி என்ன என்பது உலகம் அறியும் அது போல நிலை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுவிடகூடாது என்பது தான் நமது கவலை 130 கோடி மக்களின் பிரதமரான மோடி தற்கொலைக்கு தள்ளப்பட்டார் என்றால் அது நாட்டிற்கு அவமானமாகிவிடும், ஆனால் பாசிசத்தை கையில் எடுப்பவர்களின் நிலை அதுதான்.
ஆர்.எஸ்.எஸ் வால் பிடிக்கும் நீதிமன்றங்கள்
மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், கர்நாடகாவில் 20 ஆயிரம் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத முடியவில்லை, ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாக நீதிமன்றங்கள் இருந்தால் அவர்களையும் குற்றாவாளி கூண்டில் ஏற்றுவோம், ஹிஜாப் தடையால் 20 ஆயிரம் மாணவிகள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது போல தான் தற்போது நாம் உள்ளோம். தமிழகத்தின் நீதிமன்றங்கள் கூட ஆர்.எஸ்.எஸ்க்கு வால் பிடிக்கும் வகையில் செயல்படுகிறது. பள்ளி மாணவி தற்கொலையை மதமாற்றம் என கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். கர்நாடகா மற்றும் மதுரையில் உள்ள நீதிபதியை போன்று யாரேனும் வந்தால் அனைத்து சாதி் அர்ச்சகர் சட்டத்திற்கு தடை போடும் அபாய நிலை கூட உருவாகும், அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் என்ற பண்பாட்டு புரட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.
வன்கொடுமை சட்டம் பாய வேண்டாமா?
தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்க முயன்றால் தமிழகத்தில் இருந்து பாஜகவை விரட்டியடுப்போம் என அண்ணாமலை உள்ளிட்ட மதவாத அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம், தமிழகத்தில் யாரும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு அடையாளமான தமிழக மண்ணில் மதவாத சக்திகளை அனுமதிக்கமாட்டோம் அதற்காக தான் கோவில்களில் நல்லிணக்கம் போன்ற பண்பாடுகளை எடுத்துசெல்வோம், அண்ணாமலை போன்ற மதவெறி கும்பல்களின் மதவெறி நடவடிக்கைகளின் ஆணிவேரை அறுப்போம். தமிழகத்தின் அமைச்சர் கண்ணப்பன் பிடிஓவை பார்த்து சாதி குறித்து பேசி உள்ளார். உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்தது பாராட்டுதலுக்குரியது. அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய வேண்டாமா?. பிடிஓவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு நிலைமை என்ன ?
சாதிய ஆணவ வெறிக்கு எதிராக தீண்டாமைக்கு எதிரான என்ன விலையையும் கொடுக்க தயாராக உள்ளோம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான நடவடிக்கை என்பது ஊழல் செய்தால் இது தான் தண்டனை என்பதை உணரும் வகையிலும் தண்டனை அளிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், சிறுகுறு தொழில்களை மீட்டெடுக்க வேண்டும், கி்ராம புற விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவில் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு மிரட்டல் வர தொடங்கியுள்ளது. இதனை நியாயப்படுத்தி முதல்வர் பேசக்கூடாது. நீட் தேர்வு விதிவிலக்கிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து போரடுகிறது அது போல நீர்நிலைகளில் வசிப்பவர்களையும், கோவில் இடங்களில் வசிப்பவர்களையும் பாதுகாக்க புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத்திற்கு எப்போதாவது வரும் மோடி - சு.வெங்கடேசன்
நாடாளுமன்றத்தில் மோடி எப்போதாவது வருவார், வரும்போது ஆளும் கட்சி்எம்பிக்கள் எழுவார்கள், பா.ஜ.க எம்பி எப்போது எழுந்திருக்கிறார்களோ அப்போது வருவார், நாடாளுமன்றத்தில் மோடி பேசும்போது 5 உறுப்பினர்களான எங்களை பார்த்து போராடி பிழைப்பவர்களே என்பார் ஆனால் மோடி போல் நாங்கள் பிழைக்கவில்லையே என்பது போல எங்களுக்கு தோன்றும். தோழர்.சங்கரய்யாவின் புத்தகத்தில் ஒரு பக்கத்தை படித்தால் எங்களை கேள்விக்கேட்பவர்களுக்கு நாங்கள் யார் என்பது புரியும். சிறுபான்மை மக்களை பார்த்து சுட்டுகொள்வோம் என்று பேசிய அனுராக் தாகூரை நாடாளுமன்றத்தில் பேச விடாமால் தடுத்தவர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நாட்டின் சமூகநீதியை, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய பாசிச மோடி அரசினை எதிர்த்து கேள்விகேட்போம். கம்யூனிசம் அழிந்துவிடும் என்று நினைக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு பதில் கூறுகிறோம் கம்யூனிஸ்ட்கள் வெல்வோம்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: செல்போன் பயன்பாடே பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றங்களுக்கு காரணம் - செல்லூர் ராஜூ