மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 12 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது இருந்தே விதிமுறையை மீறி  திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதாக கூறியும், திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இதனையடுத்து 4 முறை மாவட்ட ஆட்சியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாத நிலையில் நாள்தோறும் கப்பலூர் சுங்கசாவடி அருகேயுள்ள சிட்கோ தொழிற்பேட்டை தொழில்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர்கள், சரக்கு வாகனங்கள், உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வாகனத்திற்கான கட்டணமும், திருமங்கலம், ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள், கார், ஆட்டோ, ஓட்டுனர்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறுவதால் தினசரி டோல்கேட் நிர்வாகம் மற்றும் வாகன உரிமையாளர்களையே தொடர்ந்து மோதல் நிலவிவருகிறது.



மேலும் சுங்கச்சாவடி அருகில் உள்ள சர்விஸ்சாலையை திருமங்கலம் பகுதி மக்கள் பயன்படுத்திகொள்ளலாம் என ஆர்டிஐ-ல் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளும் கோடிக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தும் அவலமும் நீடித்துவருகிறது. மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்திற்கு கடந்த 2 ஆண்டில் சுங்கசாவடி கட்டணமாக 25கோடி ரூபாய் கேட்டு டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிய நிலையும் ஏற்பட்டது. தொடர்ந்து திருமங்கலம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகளுக்கு நாள்தோறும் பல ஆயிரம் ரூபாய் செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

 

இந்நிலையில்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம், கல்லுப்பட்டி ,பேரையூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டுனர்கள், கார் உரிமையாளர்கள், தொழில்நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் திருமங்கலம் நகர் பகுதிகளில்  சுங்கசாவடியை அகற்ற கோரி கடை அடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.



கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில்  கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நடைபெறும் இந்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் கடந்த தேர்தல் முதலமைச்சர் ஸ்டாலின் திருமங்கலம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது திமுக ஆட்சி அமைந்தவுடன் 6 மாதத்தில் சுங்கசாவடி அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டும் கூட அதனை நிறைவேற்றாத நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஆயிரக்கணக்காணோர் கலந்துகொண்டனர். திருமங்கலம் பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர