மிக்ஜாம் புயல் தாக்குதலால் சென்னை மாநகரம் தற்போதும் மீளமுடியாது பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, உணவு, மின்சாரமின்றி பலரும் மழைநீரில் தவித்து வரும் சூழலில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட பரவை அதிமுகவினர் சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்.



 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு மதுரை பரவை பேரூர் கழகம் சார்பாகவும், பேரூராட்சி சார்பாகவும் சீறிய ஏற்பாட்டால் சென்னைக்கு பல்வேறு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிதண்ணீர் ஒரு லிட்டர் பாட்டில் 12 ஆயிரம்,  5 கிலோ அளவு கொண்ட  அரிசி பாக்கெட் 15 ஆயிரமும். அதே போல் 25 கிலோ அரிசி மூடை ஆயிரம் மூட்டையும், மேலும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி என பல்வேறு உணவுப் பொருட்களையும் இந்த வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட தமிழ் சொந்தங்களுக்கு நிவாரணத்தை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.



 

இது முதற்கட்டம்தான் தொடர்ந்து அடுத்தடுத்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் தக்காளி சாதம், புளி சாதம் என உணவு அளிக்க அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அதிக அளவு பாதிக்கப்பட்ட இடங்களை ஒருங்கிணைத்து உதவிகள் செய்யப்படும். தற்போது ஆர்.கே நகர் பகுதியில் உதவிகள் செய்யப்பட உள்ளது. தற்போதும் சென்னையில் வெள்ளம் பல்வேறு இடங்களிலும் வடியாமல் இருக்கிறது. இதுதான் திராவிட மாடலா? இந்த திராவிட மாடலை தான் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சொல்லினார்களா?. அமைச்சர்கள் வாய்கிழிய பேசினார்கள் ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பது என்ன. 2015 இல் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அம்மாவின் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து சரி செய்தது.



 

நான் இப்போது நிவாரண பொருட்களை சொந்த செலவில் இருந்து அனுப்பவில்லை. சொந்த செலவில் அனுப்ப பணக்காரன் இல்லை. பல்வேறு நபர்களிடமிருந்து வாங்கி ஒருங்கிணைத்து முன்னெடுத்து நிவாரண பொருட்களை வழங்குகிறேன். சென்னைக்கு செல்லக்கூடிய அனைத்து நிவாரண வாகனங்களுக்கும் சுங்கவரி கட்டணம்  இல்லாமல் அனுமதிக்க வேண்டும். அதேபோல பொருட்களை முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப வேண்டும். நிவாரண பொருட்களை யாரும் சூறையாடிவிட்டு சென்று விடக்கூடாது. அதேபோல் வெள்ளம் ஏற்பட்டது குறித்தும் அதற்கு முன்னதாக செலவு செய்திருந்தது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தற்போது பெய்தது ஓரளவு மழை தான். அதற்கே தாங்கவில்லை. ரூ.4000  கோடி பணம் என்னானது? கடலுக்குள் போய்விட்டதா என்று தெரியவில்லை. அரசு முழுமையாக எல்லாத்தையும் செய்ய முடியாது அதனால் தான் பலரும் உதவி செய்து வருகின்றனர். மதங்களை கடந்து மனிதாபிமான குழு உதவி செய்து வருகின்றனர். முதலமைச்சர் தொகுதியிலேயே மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறார்கள். மக்கள் தற்போது கொந்தளிப்பில் உள்ளனர்.  வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குறித்த அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். அவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.