மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இந்திய அளவிலான கபடிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை நடைபெறும் போட்டிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரையில்  இந்த கபடிப் போட்டி நடைபெறுவது பெரும் மகிழ்ச்சி. அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 252 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி ஈரானில் நடைபெறும் உலக கபடிப் போட்டியில் விளையாட உள்ளனர்.



 

இந்தியா சார்பில்  30 பேர் தேர்வு செய்யப்பட்டு, 12 நபர்கள் விளையாட செல்வார்கள். இதில் தமிழர் ஒருவரும் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கு தமிழக நிதி அமைச்சர்  உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அது பாராட்டுக்குறியது.  கபடிக் குழுவிற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு அரசும் விளையாட்டுத்துறைக்கு  கூடுதல் நிதி ஒதுக்க  வேண்டும். அம்மாவின் அரசும், எடப்பாடியார் அரசும் பல்வேறு நிதிகளை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல் இட ஒதுக்கீடுகளையும் கூடுதலாக வழங்கினர். தற்போது   ஆட்சியில் உள்ள தி.மு.க., அரசு விளையாட்டுத்துறைக்கு  இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது பாராட்டுக்குறியது. இதனால் விளையாட்டுத் துறைக்கு  நிறைய செய்வார்கள். கூடுதலாக விளையாட்டு  ஸ்டேடியங்கள் இருக்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். செய்தியின் வாயிலாக விளையாட்டுத் துறை அமைச்சர் கவனத்திற்கு நீங்களும் கொண்டு செல்லுங்கள்" எனத் தெரிவித்தார்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர