மன்னர் திருமலை நாயக்கரின் 440-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா அரசு சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான அரசியல் கட்சியினரும்,  அமைப்பினரும் கலந்துகொண்டனர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூவும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேடையில் பேசும் போது முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ மற்றும் கடம்பூர் ராஜூ பேசினர்.




கடம்பூர் ராஜூ பேசுகையில்..," மதுரையின் அடையாளமாக இருப்பவர் மாமன்னர் திருமலை நாயக்கர். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக 2013-ல்  அம்மா அவர்கள் அறிவித்தார்.  அம்மா அவர்களின் ஆட்சியின் போதே மாமன்னர் திருமலை நாயக்கருக்கு வெங்கல சிலை வைக்க வேண்டும் என அப்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த அண்ணன் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார். ஆனால் கோப்புகள் தயாராகியும், முதல்வர் ஒப்புதல் கிடைத்தும் தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் சிலை அமைக்க முடியாமல் போனது. இந்நிலையில் மாமன்னர் திருமலை நாயக்கருக்கு சிலை அமைக்க வேண்டும் என தற்போதைய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு விழாவை போல் இந்த நிகழ்வு நடக்காமல் மாறாக நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. அரசு விழா என்றால் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பங்கேற்பது தான் நியதி. அதற்கு மாறாக நடைபெறுகிறது.





கலைஞர் பேனா அமைவது குறித்த கேள்விக்கு !
“இது குறித்து அதன் கருத்து கேட்பு கூட்டத்திலேயே தெரிந்துவிட்டது. அதனை யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. கடலில் சிலை  அமைக்க பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைப்பது நடக்காதகாரியம். ஆனாலும் பேனா அமைப்பது தொடர்பான முன்னெடுப்புகளை செய்யக் கூடாது" என்றார்.




கொங்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜூ பதில் அளித்தார்.


 “செந்தில் பாலாஜி இருக்கும் இடத்திற்கு நல்லா கூவுகிறார். இங்கு இருக்கும் போது எப்படி கூவினார் என்று போட்டுக்காட்டுங்கள். பல கட்சிகளுக்கு சென்று வந்துள்ளார். ஆனால் அடையாளம் கொடுத்தவர் அம்மா. அ.தி.மு.க., வில் இருக்கும் போது  தி.மு.க., குடும்பம் குறித்து தரைகுறைவாக பேசினார். அம்மாவே முகம் சுழித்தார். அப்படி பேசியவர் தற்போது இப்படி பேசுகிறார். நாளை எந்த கட்சியில் இருந்து கொண்டு எப்படி பேசுவார் என தெரியாது. எனவே செந்தில் பாலாஜி பேச்சையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் ஒரு பச்சோந்தி. கரூரில் ஸ்டாலினும், கனி மொழியும் பேசாத பேச்சா. அவரைப் பற்றி இவர்கள் பேசியதும். அவர்களைப் பற்றி  இவர் பேசியதும் வரலாறு உண்டு. ஆனால் தற்போது மாறி மாறி புகழ் பாடிக்கொள்கின்றனர். எல்லாம் எதற்கு சம்திங்கிற்கு தான்" என்று நகைச்சுவை பட சூசகமாக பேசினார்.



ஈரோடு தேர்தல் குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜூ பதில் !


ஈரோடு தேர்தல் மாற்றத்தால் மக்களுக்கு பயந்துகொண்டு ஆளும் கட்சி அரசு பலவற்றை செய்ய உள்ளது. தி.மு.க., அரசு பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்தது ஆனால் எடப்பாடியார் பக்கம் தான் மக்கள் உள்ளனர். எனவே ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் மிகப்பெரும் மாற்றத்தை தர உள்ளனர்" என்றார்.