இட ஒதுக்கீடு, முன்னுரிமை போன்றவை குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கை தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பிக்க, நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்களில் எனக்கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
பின் தற்காலிக ஆசிரியர் தேர்வுக்கு பல வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அதில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. ஆகவே, தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட மாவட்டங்களில் நடவடிக்கை தொடங்கவில்லை. சென்னை உயர்நீதிமன்ற வரம்பிற்குட்பட்ட மாவட்டங்களில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பும், மதுரைக்கிளையின் தீர்ப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளது. ஆகவே, இது குறித்து முடிவெடுக்க இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக சமர்ப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தார்.
மற்றொரு வழக்கு
புதுக்கோட்டை, மேலப்பனையூர் பகுதியில் பனையப்பட்டி நகரத்தார் சிவன் கோவில் ஊரணியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கடைகளை அகற்ற கோரிய வழக்கில், புதுக்கோட்டை கோட்டாட்சியர், திருமயம் தாசில்தார் உள்ளிட்டோர் ஊரணி மூல ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த ராமசாமி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் பனையப்பட்டியில் எங்களது நிர்வாகத்தில் ஊரின் மத்தியில் நகரத்தார் சிவன் கோயில் மற்றும் ஊருணி ஆகியவை உள்ளது. இவை இரண்டும் 1907 ஆம் நிர்மாணிக்கப்பட்டவை. எங்கள் ஊரில் உள்ள புறம்போக்கு இடங்களை எல்லாம் ஒரு தரப்பினர் ஆக்கிரமித்து பட்டா போட்டு விற்று விட்டார்கள். கடந்த 2001ஆம் ஆண்டு எங்களது கோயில் ஊருணிக்குள் ஆக்கிரமித்து 8 கடைகளைக் கட்டி பாதி வேலைகளை முடித்து விட்டார்கள்.
இதன் பின்னணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளார். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் பகுதியில் பனையப்பட்டி நகரத்தார் சிவன் கோவில் ஊரணியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கடைகளை அகற்றஉரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் ஊரணியை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் S.S.சுந்தர், ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், புதுக்கோட்டை கோட்டாட்சியர், திருமயம் தாசில்தார் உள்ளிட்டோர் ஊரணி குறித்த மூல ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
ட்விட்டர் பக்கத்தில் தொடர
யூடியூபில் வீடியோக்களை காண