அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்த  பிரச்னைகள் தான் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவில்  இருக்கும் சிலர் எந்த பக்கம் ஆதரவு கொடுப்பதென்று தெரியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும்  அமைச்சராகவும் இருந்தவர் ஜி.பாஸ்கரன்.



கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராக இருந்த அவருக்கு கடந்த சட்ட மன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டார்.  அதற்கு பின் ஆழ்ந்த அமைதியில் மூழ்கிய முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரனிடம் தற்போது சூடான அரசியல்  குறித்து பேசினோம்..," தற்போதைய தி.மு.க., அரசு எந்த பணிகளும் செய்வதில்லை. எந்த துறையை கேட்டாலும் பண்டுவரவில்லை என சொல்கின்றனர். தி.மு.க., அரசால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை”.

 



 

தற்போது அ.தி.மு.க.,வில் உங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதா?

 

எனக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. எடப்பாடியார் முதல்வராக இருக்கும் போதே பொறுப்பு கேட்டேன் கொடுக்கவில்லை. இரண்டு முறை கேட்டுப்பார்த்தேன். அதற்கு பின் கெஞ்சவா முடியும். அம்மா இருக்கும் போது எனக்கு அவர், முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்காக தான் தற்போதும் கட்சியில் விஸ்வாசமாக இருக்கிறேன். இரட்டை இலை எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம்  தான் எப்போதும் இருப்பேன்.



 

ஓ.பி.எஸ்., ஏன் புறக்கணிக்கப்படுகிறார் ?

 

ஓ.பி.எஸ் ஆரம்பத்திலேயே விட்டுவிட்டார். எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்களை தக்க வைக்காமல் விட்டுவிட்டார். யாருக்கும் எதுவும் செய்யவில்லை. அதனால் அவர் பின்னால் சென்றால் பாதியில் கழட்டிவிட்டுவிடுவார் என யாரும் அவர் பக்கம் செல்ல மறுக்கின்றனர். அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட அதன் காரணமாக தான் செல்ல மறுக்கின்றனர். ஓ.பி.எஸ்.,யிடம் இல்லாத பணம் இல்லை. ஆனால் அவர் செலவு செய்யமாட்டார். தேர்தலுக்கே செலவு செய்ய மாட்டார், சும்மாவா செலவு செய்வார். அவர் தான் அப்படி என்றால் அவரின் மகன்களும் அப்படி தான்.



 

சிவகங்கையில் தி.மு.க., செயல்பாடு எப்படி இருக்கிறது ?

 

அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் தொகுதியில்  எப்படி செயல்படுகிறார் என தெரியவில்லை. ஆனால் அதிகளவு கமிஷன் கேட்பதாக சொல்றாங்க. அதே போல் சிவகங்கை நகராட்சியில், நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுகிறது. வணிகர்களிடம் கூட பணம் வசூல் செய்வதாக புகார் வருகிறது. அவர் குறித்து விரைவில் செய்தி தருகிறேன். எதையும் ஆதாரத்தோடு சொல்லவேண்டும் என காத்திருக்கிறேன். விரைவில் உங்களை அழைத்து செய்தி தருகிறேன்” என்றார்.



 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண