தமிழகத்தில் 2 நாட்கள் பயணமாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விமானம் மூலமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட நிலையில் தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு  வருகை தந்த குடியரசு தலைவர் விமானநிலையத்தில் இருந்து காரில் பயணம் செய்து  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு கோயில் முன்பாக அமைக்கப்பட்ட தற்காலிக ஓய்வறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.



 

அதன்பின்னர் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு சென்ற குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி,  பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.  கோயிலுனுள் வருகை தந்தபோது இந்து அறநிலையத்துறை சார்பில் முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் முரளிதரன்,  அமைச்சர் மனோ தங்கராஜ், கோயில் அறங்காவல் சார்பில் தக்கார் கருமுத்துகண்ணன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,  ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.  இதனையடுத்து கோயிலுக்குள்  வருகை தந்த குடியரசு தலைவருக்கு கோயில் சார்பில் சிவாச்சாரியார்கள்  பூரண கும்ப மரியாதை அளித்தனர்.



 

இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதலில் அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார் அப்போது கோயில் சிவாச்சாரியார்கள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்தார் இதனை தொடர்ந்து குடியரசு தலைவருக்கு கோயில் சார்பில்   குங்குமம் பிரசாதத்துடன்  மீனாட்சியம்மன் சிலையும் வழங்கப்பட்டது.  சாமி தரிசனம் முடித்த பின்னர் அழகர்கோவில் ரோடு பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு கார் மூலமாக புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலமாக கோவை கிளம்பினார்.



 

முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவரை  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோதங்கராஜ், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் ஆகியோர் வரவேற்றனர்.









கோவிலிலிருந்து கார் மூலமாக பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்ற குடியரசுத் தலைவர் தெற்கு ஆவணி மூல வீதிப்பகுதியில் வெயிலில் காத்திருந்த பொது மக்களை பார்த்தபின் உடனடியாக திடீரென காரில் இருந்து கீழே இறங்கி பொதுமக்களை நடந்து சென்று சந்தித்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். குடியரசு தலைவரை பார்த்த பொதுமக்கள் உற்சாக மிகுதியால் ஆரவாரம் செய்தனர். குடியரசு தலைவர் காரில் இருந்து கீழே இறங்கி பொதுமக்களை சந்தித்ததை பார்த்த பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.