உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி ஏற்படுத்திய அதிர்வு இன்னும் அடங்கியபாடில்லை. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் நிகழ்ந்த மிகச்சிறந்த இறுதிப்போட்டிகளுள் ஒன்றை நேற்று முன் தினம் ஒட்டுமொத்த உலகமும் கண்டுகளித்து மெய்சிலிர்த்தது. கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கிய 22வது கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நேற்று கோலாகலமான கொண்டாட்டத்துடன் நிறைவு பெற்றது. இதில் நடப்புச் சாம்பியனாக இருந்த பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியை அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4 - 2 என்ற கணக்கில் வென்றது.
அதற்கு முன்னதாக போட்டியின் முழு நேரம் முடிவடையும்போது இரு அணிகளும் 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில், இருந்தது, இதன் பின்னர், வழங்கப்பட்ட கூடுதல் நேரம் 30 நிமிடத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களுடன் சமநிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடும் பலப்பரீட்சைக்க்குப் பிறகு நேற்றிரவு உலகக்கோப்பையை கைகளில் ஏந்திய அர்ஜெண்டினா அணியை நம் நாட்டின் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட உலகம் முழுவதும் உள்ள கால் பந்து ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர். இந்தியாவில் பெருமளவிலான கால்பந்து ரசிகர்களைக் கொண்ட கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் நேற்று இரவு தொடங்கி தொடர்ந்து கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் அர்ஜென்டினாவின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார்கள். இதனை கொண்டாடும் வகையில் மதுரை மாநகர் கோ.புதூர் பகுதியில் உள்ள அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் தங்களது கைகளில் மெஸ்ஸியின் புகைப்படத்தை ஏந்தியவாறு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.