தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 46சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் நீதிபதி முன்பாக வழக்கில் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி ஆஜராகி பகுதியாக சாட்சியம் அளித்தார்.
இதனையடுத்து கொலை வழக்கில் நான்காவது எதிரியாக இருக்கும் தலைமை காவலர் முருகன் தரப்பில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்- ஐ கொன்றதில், ஏற்கனவே இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து சென்றுள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இந நேரடி தொடர்பு உள்ளது. எனவும் அவரையும் இந்த வழக்கில் எதிரியாக உடனே சேர்க்க வேண்டும் என்று தீவிரமாக வாதம் வைக்கப்பட்டது. இந்த வாதம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு வழக்கையும் பரபரப்பாக்கியுள்ளது.
இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவித்தனர்.