ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளையின் சார்பில் ஏர்வாடி அருகே 'பிச்சை மூப்பன் வலசை' கிராமத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணல் திட்டுக்கு பயணிகள் சென்றுவர சுற்றுலா படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. இந்தபகுதியில் அரியவகை பவளப் பாறைகள், கடல் பாசிகளும், அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் காணப்படுகின்றன. ஒரே நேரத்தில் 12 பேர் வரை இந்தப் படகில் சவாரி செய்யலாம். கடலுக்கு அடியில் உள்ள அனைத்து வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை கண்டு மகிழலாம். இதன் மூலம் சிலர் அனுமதி இன்றி கடலுக்குள் சென்று வருவது தவிர்க்கப்படும். மேலும் சுற்றுலாத் துறையும்  மேம்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அரிய வகை பவள பாறைகள் அதிகளவில் இப்பகுதியில் உள்ளன. தமிழகத்தில் கடல் பகுதியில் இது போன்ற அரிய வகை பவள பாறை காட்சிகளை இங்கு மட்டுமே காண முடிகிறது.




ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசையில் இருந்து முல்லைத்தீவு செல்லும் கடல் வழி நடுவே ஒரு ஹெக்டர் பரப்பளவில் மணல்திட்டுக்கள் காணப்படுகின்றன. இதை அனைத்து பொதுமக்களும் ஏர்வாடி தாஹாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் காணும் வகையில், கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்பட்டு படகுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் பார்வையாளர்கள் கண்டுகளிக்க மன்னார் வளைகுடா வனத்துறை சார்பில்   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மீன்பிடி அனுமதி கிடையாது. இதனால் இப்பகுதியில் அதிக பவளப்பாறை, மூளைப்பாறை மான் கொம்பு வடிவம் கொண்ட பவளப்பாறைகள் அதிகம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.




இப்பகுதியில் படகு சவாரி செல்பவர்களை கடல் நடுவே உள்ள மணல் திட்டில் பாதுகாப்புடன் இறங்கி சுற்றிப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது முதல்கட்டமாக  இரண்டு படகுகள் மட்டுமே கரையிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஏறிச்சென்று பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று மணல் திட்டை கண்டு ரசித்து வருகின்றனர். இது குறித்து உள்ளுர் பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் கூறுகையில்,   இதுவரையிலும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கண்ணாடி பொருத்திய படகு  சவாரி  வேறெங்கும்  கிடையாது. சுற்றுலாத்தலங்கள் அதிகம் இல்லாத இந்த மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு கடலுக்குள் அரியவகை பவளப்பாறைகள் அமைந்துள்ள இந்த பகுதியை தேர்வு செய்த தமிழக அரசு




உள்ளுர் பொதுமக்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்து வரும்  சுற்றுலாப்பயணிகளும் கண்டு மகிழ்ந்து இன்புற்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்து எங்கள் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றிய அரசுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும், இதில் சென்றதும் கடலுக்கடியில் உள்ள பவளப்பாறை மட்டுமின்றி  கடல்வாழ் அனைத்து உயிரினங்களையும் நேரடியாக காண முடிவதால் மனதிற்கு மிகவும் இதமளிப்பதாக கூறுகின்றனர்.




மேலும்,  மன்னார்வளைகுடா வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், படகில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்குகிறோம். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கையாக  கடலில் பயணம் செய்வது குறித்து ஆலோசனை வழங்கிய பின்னேரே  இங்கிருந்து படகுகளை கடலுக்குள் இயக்குகிறோம். அவர்களைப் பாதுகாப்பான முறையில் கடலுக்குள் உள்ள திட்டுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அரியவகை அனைத்து பவளப்பாறைகளையும் கடல்வாழ் உயிரினங்களையும் சுற்றிக் காண்பித்து விட்டு பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில்  மிகவும் கவனமாக இருக்கிறோம்.




குறிப்பாக, படகில் இருந்து கிளம்பும் முன்பாக அவர்கள் சனிடைசர் கொடுத்து கைகளை சுத்தமாக கழுவிய பின்பே படகில் பயணம் செய்ய அனுமதிக்கிறோம், 12 தனித்தனி இருக்கைகள் கொண்ட இந்தப்படகில் இருந்தபடியே கண்ணாடி இழை மூலம் கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள், அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் அழகை ரசிக்கலாம். சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது மட்டுமின்றி  பவளப்பாறைகள்தான்  மீன்வளத்தை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையும் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது என்பதையும் இது காட்டுகிறது என தெரிவித்தனர்.