ராமநாதபுரம் மாவட்டத்தில்  கனமழை காரணமாக   பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. இன்று காலை முதல் பரவலாகவே மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை என முன்கூட்டியே அறிவிப்பு செய்திருந்தால், மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றது தவிர்க்கப்பட்டிருக்கும்.  ஆனால், இன்று காலை  சுமார் 10 மணி அளவில் பள்ளிகளுக்கு  விடுமுறை என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட தாமதமான அறிவிப்பால் 9 மணிக்கெல்லாம் பள்ளிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வருவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பெற்றோர்களும் மாணவர்களும் அவதியடைந்தனர்.


வங்க மற்றும் அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, வட தமிழகத்தில் 2 நாட்களாக மிக கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்கக்கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழக கடலோரப் பகுதிக்கு வந்தது. அதேநேரத்தில் அரபிக் கடல் பகுதியிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 3 கிமீ உயரத்தில் உருவாகி வடகிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இந்த இரண்டு வானிலை நிகழ்வுகளால், வடதமிழகத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.




மேலும், புதுக்கோட்டை , ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்யும், நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், வளி மண்டல மேலடுக்கில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சத் தொடங்கியுள்ளது. அதேபோல, வடதமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள கடலோரப் பகுதியில் சுமார் 3 கிமீ உயரம் வரை நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.




இது தவிர தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதால் 10 மற்றும் 11 ஆம் தேதிகளிலும் மழை பெய்யும். தற்போது மழை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்துக்கான தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையிலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் ஆழ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகின்றனர். 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் லேசாக பெய்ய தொடங்கிய மழையானது நேரம் செல்லச்செல்ல கனமழையாக மாறியது. மாவட்டத்தில், ராமநாதபுரம் நகர் பகுதி கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், ராமேஸ்வரம், பாம்பன் என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாகவே மழை பெய்தது.




இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது என்பதால், மாணவ மாணவிகள் காலையிலேயே பள்ளிகளுக்கு செல்வதற்கு ஆயத்தமாகினர். கன மழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ராமநாதபுரம்  மாவட்டத்தில் பள்ளி விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலை 9:50 மணிக்கு   மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிப்புச் செய்தது. இதனால் ஒன்பது மணிக்கெல்லாம் பள்ளிகளுக்கு மழையையும் பொருட்படுத்தாமல்  சென்ற மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்ப வருவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. எனவே  மாவட்ட நிர்வாகம் பள்ளி விடுமுறை தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு செய்து இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்வது தவிர்க்கப்பட்டிருக்கும், என புதிதாக மாவட்டத்தில் ஆட்சியர் பொறுப்பேற்றிருக்கும் 'சங்கர்லால் குமாவத்' க்கு பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.