சிவகங்கை மாவட்டம் தாயமங்களம் முத்து மாரியம்மன் கோவில் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 2 குழந்தைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும், இழப்பீடாக ரூ 10 லட்சம் வழங்க கோரி வழக்கு குறித்து உள்துறைச் செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காயத்திரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "நாங்கள் நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள்  கோவில் திருவிழாக்களில் பொம்மைகள் விற்பணை செய்து வாழ்ந்து வருகிறோம்.


சிவகங்கை மாவட்டம் தாயமங்களம் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் பொம்மை விற்பனை செய்வதற்காக 10 நாட்கள் முன்னதாகவே குடும்பத்துடன் சென்று பொம்மைகள் விற்பனை செய்து வந்தோம். திடீரென்று 4.4.2021 அன்று கோவில் திருவிழாவில் எங்களது 7 வயது மகன் வெற்றிவேல் மற்றும் 8 வயதுடைய மகன் குணசேகரன் ஆகிய இருவரும் தொலைந்து விட்டனர் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.


இந்த நிலையில் கோவில் குளத்தில் பொதுமக்கள் கூட்டமாக இருந்தனர். அங்கு சென்று பார்த்த பொழுது எங்களது 2 மகன்களும் சடலமாக கிடந்தனர் அவர்களில் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். 


இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து காவல் துறையினர் எந்த வித விசாரணையும் இன்றி உடலை எங்களிடம் ஒப்படைத்தனர். 2 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தது குறித்து விசாரணை செய்யவும், இழப்பீடு வழங்க கோரி 2 முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.


எனவே, கோவில் குளத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 குழந்தைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதி, வழக்கு குறித்து உள்துறைச் செயலர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 8 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.









மற்றொரு வழக்கு

 

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி குச்சம்பட்டி ஊராட்சி சார்பில் விவசாய நிலத்தின் நடுவே தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்த கோரிய வழக்கில், தார் சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வேளாம்பூர் கோபாலபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "விருதுநகர் வட்டம் எல்லிங்க நாயக்கன்பட்டி கிராமத்தில் 3.75 ஏக்கர் பட்டா நிலத்தை கிரையம் செய்து வாங்கியுள்ளேன். இந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறேன். இந்த நிலம் தொடர்பான அனைத்து வருவாய் ஆவணங்களும் என் பெயரில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 26ல் குச்சம்பட்டி ஊராட்சி சார்பில் என் விவசாய நிலத்தின் நடுவே தார்சாலை அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இந்த விவசாய நிலத்தை நம்பி தான் எனது வாழ்வாதாரமே உள்ளது. எனவே, எனது விவசாய நிலத்தில் சாலை அமைப்பதை தடுத்து நிறுததவும், எனது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் பட்டா நிலத்தில் சாலை அமைக்க வேண்டும் என்றால் அவரது ஒப்புதல் இருக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட நிலத்தை ஆர்ஜிதம் செய்திருக்க வேண்டும். 

இதை தவிர்த்து மூன்றாதவதாக எந்த வழியும் இல்லை. எனவே, மனுதாரர் நிலத்தில் சாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.