திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புதுக்காடு பகுதியை சேர்ந்த ரோஷி என்பவர் கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி , விளாங்குடி பகுதியை சேர்ந்த அமுதா என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அமுதா என்பவர் தூத்துக்குடியில் பிசியோதெரபி மற்றும் அறக்கட்டளை வைத்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த அமுதா கொடைக்கானலில் உள்ள ரோஷியிடம் தொலைபேசியில் அழைத்து புதிய பிசினஸ் இருப்பதாகவும் அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைக்காட்டியுள்ளார்.
இதில் குறிப்பிட்ட பணத்தை செலுத்தி புதிய அப்ளிகேஷன் மூலம் உறுப்பினராக சேர்ந்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட whatsapp குழுவில் சேர்ந்து கொண்டு தனக்கு தெரிந்தவர்களை சந்தித்து குறிப்பிட்ட பணம் செலுத்தினால் அதன் மூலம் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்றும், அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நிலைக்கு செல்லும் போது அதிக பணமும், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் கம்பெனி நிர்வாகம் வழங்கும் என ஆசைவார்த்தை கூறி பணத்தை பெற்றுள்ளனர். தொடர்ந்து கொடைக்கானல் புதுக்காட்டு பகுதியில் இருந்து தொடங்கப்பட்ட நிலையில் தற்போது கொடைக்கானலில் சுமார் 364 கும் மேற்பட்டவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பெண்கள் சேர்ந்துள்ளனர்.
முதற்கட்டமாக 6000 ரூபாய் முதல் 2 லட்சம் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த ஸ்கீம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆப் தானாக மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த அமுதாவிடம் கேட்கும் போது இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை நானும் உங்களை போல உறுப்பினர் மட்டுமே என அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 3000கும் மேற்பட்ட வர்கள் இருப்பதாகவும், இவர்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கொடைக்கானலில் மட்டும் சுமார் 1 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கூலி வேலை செய்து, வீட்டுக்கு தெரியாமல் பணம் சேர்த்து அதனை இந்த மோசடி கும்பலிடம் பறிகொடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அதே போல பாதிக்கப்பட்டவர்கள் செலுத்தும் தொகையை gpay , மூலம் upi பயன்படுத்தி வேறு ஒரு வங்கி கணக்கில் செலுத்தி வந்ததாகவும், அதிக வரவு செலவு கணக்கு காண்பித்த நிலையில் அந்த கணக்கும் வங்கி மூலம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பெண்களுக்கு வழங்கக்கூடிய உரிமைத்தொகை ரூபாய் 1000 , மாத சம்பள தொகை ஆகியவையும் இந்த யுபி மூலமாக வேறு ஒரு வேறு ஒரு அக்கவுண்டிற்கு செல்வதாகவும் வருத்ததுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் முதல்வரின் தனி பிரிவு ஆகியவற்றுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோல பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே கூலி வேலை செய்து வரும் இவர்கள் தங்களது வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றம் கிடைக்காதா என்ற ஆசையில் இந்த ஒரு திட்டத்தில் சேர்ந்ததாகவும் , ஆனால் இது போல ஒரு மோசடி கும்பலிடம் தங்களது பணத்தை இழந்து தற்போது பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.