கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம்-மதுரை வழித்தட சாதாரண கட்டண ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 2020 மார்ச் 25 முதல் சாதாரண கட்டண ரயில்கள், விரைவு ரயில்கள், தொலைதூர அதிவிரைவு ரயில்கள் உள்பட அனைத்து ரயில் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள்,  இணைய தள முன்பதிவு டிக்கெட் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண கட்டண ரயில்களான ராமேஸ்வரம் மதுரை இடையே இரு மார்க்கத்திலும் இயங்கிய காலை, மதியம், மாலை நேர ரயில்கள், திருச்சி- ராமேஸ்வரம் இடையே இரு மார்க்கத்திலும் இயங்கிய காலை, மதிய நேர ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆகஸ்ட் 6ஆம் தேதியுடன் 500 நாட்களை கடந்தும் கூட சாதாரண கட்டண ரயில்கள் இயக்கப்படவில்லை.



கல்வி, வேலை, மருத்துவம், வணிக பொருட்கள் கொள்முதல் என அனைத்து வகையிலும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மதுரையை தான் சார்ந்துள்ளனர். இதற்கு ராமநாதபுரம்-மதுரை இடையேயான பஸ், ரயில் சேவை பயன்பட்டு வந்தது. கடந்த 2020 மார்ச் 25 கொரோனா முழு ஊரடங்கிற்கு முன்பு வரை ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு காலை 5:30, 11:20, மாலை 6:00 மணிக்கும், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காலை 6:50, மதியம் 12:40, மாலை 6:10 மணிக்கும் ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு மனு ஒன்றை  அனுப்பியுள்ளார்.



அதில், கொரோனா காலக்கட்டத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பட்டியலில் ராமேஸ்வரம்- மதுரை சிறப்பு ரயில் இயக்கப்படாததால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பல்வேறு தேவைகளுக்காக மதுரையை சார்ந்துள்ளனர். இத்தகைய ரயில் சேவை அடித்தட்டு மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் அதிக அளவில் பயன்படுத்தும் சேவையாக உள்ளது. தூர இடைவெளி குறைவாக உள்ளதால் ராமேஸ்வரம்- மதுரை சிறப்பு ரயில் இயக்குவதில் சிரமம் என இருந்தால் ராமேஸ்வரம் - பழநி என வழித்தடத்தை மாற்றி அமைத்து மதுரை வழியாக சிறப்பு ரயில் சேவையை துவங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


குறிப்பாக பேருந்தில் செல்ல  ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் ரயிலில் 20 ரூபாய் கட்டணம் தான் வசூலிக்கப்பட்டது. இதனால் ரயில் சேவையை ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் அதிகம் பயன்படுத்தினர். ஆனால், தற்போது சாதாரண மக்கள் அதிக செலவு செய்து வாடகை வாகனங்களில் மதுரைக்கு சென்று திரும்பும் நிலை உள்ளது.


இதனால், கமிஷன் அடிப்படையில் டிக்கெட் விற்பனை முகவர்கள், ரயில்களில் வியாபாரம் செய்வோர் வேலை இழந்துள்ளனர். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரையில் சரக்குகள் வாங்கி விற்கும் வியாபாரிகள் கடந்த 17 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



மதுரையில் பணியாற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதி அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த மதுரை-ராமேஸ்வரம் ரயில் சேவை நிறுத்தத்தால் கூடுதல் போக்குவரத்து செலவை எதிர்கொண்டுள்ளனர். வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி ராமேஸ்வரம்- மதுரை சாதாரண கட்டண ரயில்களை மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே மதுரை கோட்ட பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.