மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் இயங்கி வந்த கடைகள் இன்று அகற்றப்பட்ட நிலையில், மாற்று இடங்களில் மின் வசதிகளை உடனே செய்து தருமாறு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உலகின் முதல் ஷாப்பிங் மால் என அழைக்கப்படும் மதுரை புதுமண்டபத்தில் பல நூற்றாண்டுகள் பாரம்பரியம் நிறைந்த பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், அலங்கார பொருட்கள் விற்கும் கடைகள், புத்தக கடைகள், பாத்திர கடைகள், தையல் கடைகள் மற்றும் பேன்சி கடைகள் என   கிட்டதட்ட 300 கடைகள் இயங்கி வருகின்றன.






 பழமை வாய்ந்த புது மண்டபத்தில் கலை நயமிக்க சிலைகள், சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் உள்ளமையால் இதனை காட்சி பொருளாக மாற்றி பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்தது.  அது தொடர்பாக அங்குள்ள வியாபாரிகளிடம் ஆலோசித்து, கடைகள் அனைத்தையும் புதுமண்டபம் அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடம்மாற்றம் இறுதி செய்யப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 7.91 கோடி ரூபாய் மதிப்பில் அங்கு இரண்டு தளங்களாக கடைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் இடமாற்றம் செய்ய வியாபாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.



 


 

மாற்று இடத்தில் முழுமையான வசதிகள் செய்து தராமல் கடந்த 2021 ஆண்டு நவம்பரில் கடைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தது கோயில் நிர்வாகம். 30க்கும் மேற்பட்ட கடைகளுக்கு குன்னத்தூர் சத்திரத்தில் மாற்று இடம் வழங்கப்படவில்லை. 14 கடைகளுக்கு மட்டுமே மின் மீட்டர் பொருத்தப்பட்டு அங்கும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தற்போது, கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்காமல் கோயில் நிர்வாகத்தினர் மட்டும் வந்து கடைகளை இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். வியாபாரிகள் செய்வதறியாது கண்ணீருடன் தவித்து வருகின்றனர்.