நகர்புற உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம்  தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று 7 பூத்களில் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17 ஆவது வார்டில் பெண்களுக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 



 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நாளன்று நகராட்சி 17 ஆவது வார்டு  பெண்களுக்கான வாக்குச்சாவடியில்  பதிவேட்டில் கையெழுத்து இல்லாமல் வாக்குப்பதிவு நடந்ததாக திமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்த நிலையில்  மாநில தேர்தல் ஆணையம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17 ஆவது வார்டில் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவித்தது.



 

இந்த நிலையில் திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 17ஆவது வார்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் வாக்குச்சாவடி மையத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதை யொட்டி வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.



 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Local Body Election | காங்கிரஸ் நிர்வாகி திட்டியதால் பாஜக வேட்பாளர் சாலையில் தர்ணா

 

இதனையடுத்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரம் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மதுரை மாவட்ட காவல்துறை எஸ்.பி நேரில் வந்து பார்வையிட்டார். பெண்கள் அனைவரிம் தீவிரமாக வாக்கு செலுத்தி வருகின்றனர். 10 மணி நிலவரப்படி 30 % வாக்குப் பதிவுகள் பதிவாகின. “எங்கள் பகுதியில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெறுவதால்,  எங்கள் வார்டு பெண்கள் அனைவரும் தொடர்ந்து வாக்களித்து வருகிறோம். பெண்கள் வாக்குச் சாவடி என்பதால் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது” வாக்களித்த பெண்கள் தெரிவித்தனர்.