தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாகும். இதில் 142 அடி வரை நீரை தேக்கி கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் கடந்த 30ஆம் தேதி அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.
கடந்த ஒரு சில தினங்களாக அணையின் நீர்மட்டம் 141.95 அடியாக இருந்தது. அணையில் இருந்து கேரள பகுதிக்கு வினாடிக்கு 1900 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் ஆரம்பித்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டியது. இதனால், கேரளாவுக்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்தும் வெகுவாக குறைந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் குறைக்கப்பட்டது. அதன்படி, அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,867 கனஅடியில் இருந்து 1,344 கன அடியாகவும், கேரளாவுக்கு வினாடிக்கு 1,727 கன அடியில் இருந்து 1,062 கன அடியாகவும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றும், இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்தது. மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 406 கன அடியாக குறைந்தது. இன்று அணையிலிருந்து நீர் திறப்பானது குறைந்து வினாடிக்கு 1200 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் முல்லைப்பெரியாறு 28.8, தேக்கடி21.6, கூடலூர் 61.7, உத்தமபாளையம் 93.0, வைகை அணை 28.2, வீரபாண்டி 128.0, சோத்துப்பாறை 14.0, பெரியகுளம் 2.0, போடி 98.2, அரண்மனைப்புதூர் 80.2, ஆண்டிப்பட்டி 64.0.
தேனி மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகள் நிலவரம்
வைகை அணை: நீர்மட்டம் - 70.11 (71 அடி), நீர் இருப்பு – 5,855 மில்லியன் கன அடி, நீர் வரத்து – 6,294 கனஅடி, நீர் திறப்பு – 8,681கனஅடி
மஞ்சலார் அணை: நீர்மட்டம் - 55.00 (57 அடி) ,நீர் இருப்பு – 435.32 மில்லியன் கனஅடி , நீர் வரத்து – 100 கன அடி , நீர் திறப்பு– 0
சோத்துப்பாறை அணை: நீர்மட்டம் - 126.80 (126.28 அடி) , நீர் இருப்பு – 100 மில்லியன் கனஅடி, நீர் வரத்து –46 கனஅடி, நீர் திறப்பு –30 கனஅடி
சண்முகா நதி அணை: நீர்மட்டம் - 52.50 (52.55 அடி), நீர் இருப்பு – 79.57 மில்லியன் கனஅடி, நீர் வரத்து – 9 கனஅடி, நீர் திறப்பு – 0 கனஅடி
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்