தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள பென்னி குவிக் மணிமண்டபம் முன்பாக விவாசாய சங்கத்தினர் கேரள அரசுக்கு எதிராக தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று கேரளாவில்  நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை தடுத்த நிறுத்தவும், முல்லை பெரியாறு அணை குறித்து கேரளாவில் தொடர்ந்து பரவி வரும் தேவையற்ற கருத்துக்களையும் விமர்சனங்களையும் நிறுத்தக்கோரியும்,




உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசிய கேரள எம்.பிக்களின் பேச்சுக்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக உள்ள 23 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.




இந்த விவசாய சங்கத்தினர் நடத்திய போராட்டத்தினால் கேரளாவிற்கு செல்லும் குமுளி வழியிலான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் - கேரள இடையேயான போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. குமுளி மலைவழிச்சாலை மார்க்கமாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இதனால் சிரமம் அடைந்தனர். 



சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் வரிசையில் நின்றனர் பின்னர் போக்குவரத்து துவக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் உத்தமபாளையம் கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்த போதிலும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று இன்று கேரளாவில் நடைபெறும் இரு சக்கர வாகனப் பேரணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து கேரள அரசுக்கு எதிரான தொடர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் போலிசாரின் பேச்சு வார்த்தைக்கு பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண