வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவையான பருவமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் பருவம் தவறிய கன மழை பெய்து அறுவடை நேரத்தில் விவசாயிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தியது. பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தில் விளைந்த நெற்கதிர்கள் வெள்ளத்தில் போன நிலையில், விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகைக் காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர், எரிசக்தித்துறை அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய அவர்,




வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் புயல், கனமழை, வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்ககைகளை மேற்கொள்ள 15 மண்டல அளவில் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் 15 குழுக்களும், 429 ஊராட்சிகளில் 3,500-க்கும் மேற்பட்ட முதல்நிலை மீட்பு பணியாளர்களை கொண்டு  முதல்நிலை மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  


வெள்ளம் மற்றும் மழைநீர் எளிதில் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்க 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 92 பள்ளி கட்டடங்கள், 17 கல்லூரிகள், 53 திருமன மண்டபங்கள், 12 சமுதாய நலக்கூடங்கள் என மொத்தம் 197 நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, மண்டல அளவிலான குழு அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், நிவாரண மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அம்மையங்களின் தயார் நிலை குறித்து உறுதி செய்திட வேண்டும். 




அவசர கால சூழ்நிலையினை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான போதிய அளவு மருந்து, மாத்திரைகளை தயார்நிலையில் வைத்திட பொது சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 107 ஜேசிபி இயந்திரங்கள், 55 ஜெனரேட்டர்கள், 4813 மின்கம்பங்கள், 125 மின்மாற்றிகள் 39 மர அறுவை இயந்திரங்கள், 47 உயர் மின் அழுத்த பம்புகள், 16,750 மணல் மூட்டைகள், 12,650 சவுக்கு மரக்கட்டைகள் உட்பட நவீன உபகரனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதனை உடனடியாக சீர்செய்திட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும். 



மேலும், மாவட்டத்தில் உள்ள கண்மாய், ஊரணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரளவினை கண்காணித்திடவும், நீர்வழித்தடங்களில் தடையில்லாமல் பராமரித்திடவும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள வாகன எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பாடாமல் போதிய இருப்பு வைத்திட வேண்டும். பொது மக்கள், கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான அறிவிப்புகளை முறையே அறிவித்திட வேண்டும்.  அதேபோல, பொதுமக்கள் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயலாக்க பிரிவினை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்தார். முன்னதாக, அவர் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சனவெளி கிராமம், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கிதம்பரம் பிள்ளை ஊரணி, தங்கப்பா நகர் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.